உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனையில் இனியெல்லாம் நலமே நோயாளிகளின் நிலைமை குறித்து எளிதாக அறியலாம்

அரசு மருத்துவமனையில் இனியெல்லாம் நலமே நோயாளிகளின் நிலைமை குறித்து எளிதாக அறியலாம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மாநிலத்தில் முதன்முறையாக விபத்து அவசர சிகிச்சை, தலைக்காய தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளின் நிலைமை குறித்து உறவினர்களிடம் தெரிவிக்க டி.வி.எஸ். குழுமத்தின் ஆரோக்யா நல அறக்கட்டளை சார்பில் செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான மையத்தை திறந்து வைத்து டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது:தீவிர விபத்து பிரிவு வளாகத்தில் தினமும் 40 முதல் 50 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். 2024ல் 9537 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தலைக்காயம், எலும்புமுறிவு என ஒரே நபருக்கு பல்வேறு காயங்கள் இருக்கும். இந்த சூழ்நிலையில் டாக்டர்களும், நர்ஸ்களும் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தான் முன்னுரிமை தர முடியும். நோயாளியின் நிலையை அவரது உறவினர்கள் ஒவ்வொருவருக்காக விளக்கிச் சொல்வது சிரமமாக இருந்தது.டாக்டர்களின் சிரமத்தை தவிர்க்கும் அதே நேரத்தில் நோயாளிகளின் நிலையை பதட்டமின்றி அவர்களது உறவினர்களுக்கு எடுத்துக்கூற அனுபவம் வாய்ந்த செவிலியர் ஒருவரை டி.வி.எஸ். குழுமத்தின் ஆரோக்யா நல அறக்கட்டளை சார்பில் நியமித்துள்ளோம். ஒன்றரை மாதங்களாக கண்காணித்ததில் நோயாளிகளிடம் தகவலை தெரிவிக்கும் பொறுப்பு அந்த செவிலியர் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. டாக்டர், நர்ஸ்கள் சிகிச்சையில் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.அடுத்து இரண்டு ஷிப்ட்களாக செவிலியர் நியமிக்கப்படுவர். மாநில அளவில் அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவன பங்களிப்புடன் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஆறுதல் படுத்தும் மையம் இங்கு தான் முதன்முதலாக அமைத்துள்ளோம். அடுத்ததாக மருத்துவமனை பழைய வளாகத்தில் உள்ள தீவிர விபத்து பிரிவிலும் இதை நடைமுறைப்படுத்த உள்ளோம்.மருத்துவமனை வார்டு எண்கள் மாற்றப்பட்ட நிலையில் இன்னமும் பணியாளர்கள், நர்ஸ்கள் அந்த எண்களை கையாள்வதில் குழப்பம் உள்ளது. இதை தவிர்க்க ஒவ்வொரு வளாகத்திற்கும் ஒரு எண் குறிப்பிட்டு, எந்த தளத்தில் உள்ளது என்பதை அடுத்தடுத்த எண்ணாக வழங்க திட்டமிட்டுள்ளோம். சோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளோம் என்றார்.மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் ஸ்ரீலதா, முரளிதரன், ஏ.ஆர்.எம்.ஓ.,க்கள் விஜயலட்சுமி, சுமதி, தீவிர விபத்துப்பிரிவு துறைத்தலைவர் தானப்பன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ