சாலைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
மதுரை: தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் மார்ச் வரையான ரோடு பணிகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பணிகள் நடக்கும்போது அவ்வப்போது அமைச்சர் எ.வ.வேலு, தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.ஓராண்டு பணிக்குப் பின் அதன் தரத்தை நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமான பிரிவு, நபார்டு, கிராமச் சாலைகள் பிரிவு என ஒரு அலகின் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.அதன்படி மதுரையில் விராதனுார் - வலையங்குளம் இடையே கடந்தாண்டு ரூ.2 கோடி மதிப்பில் 4 கி.மீ.,க்கு ரோடு பணிகள் நடந்தன. இந்தச் சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறையில் பிறமாவட்டங்களில் உள்ள ஊரக சாலைகள், தரக்கட்டுப்பாடு உட்பட பல பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இதேபோல திருமங்கலம் கூடக்கோயில் சாலையும் ஆய்வு செய்யப்பட்டது. பணியில் திருநெல்வேலி நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் தலைமையில் ஆய்வு நடந்தது. நபார்டு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், கட்டுமான பிரிவு கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்டப் பொறியாளர் சுகுமாறன் உடனிருந்தனர்.