சிறைக்கைதிகளுக்கு ஏ.டி.எம்., கார்டு நடைமுறை; சிக்கலில் அதிகாரிகள்
மதுரை : தமிழக சிறைக் கைதிகள் அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பான பணியால் வழக்கமான சிறைப்பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் உள்ள தண்டனை, விசாரணை கைதிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான சோப், டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களை அங்குள்ள கேண்டீன் மூலம் பணம் செலுத்தி வாங்கிக்கொள்கின்றனர். இதற்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனி பதிவேடு பராமரிக்கப்படுகிறது. உறவினர்கள் கொடுக்கும் தொகை கைதியின் பதிவேட்டில் வரவு வைக்கப்படுகிறது. வாங்கும் பொருட்களின் விலையை கணக்கிட்டு தொகை கழிக்கப்படும். இதற்கான அலுவலர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதை தவிர்க்க கைதிகளுக்கு வங்கி கணக்கு துவங்கி ஏ.டி.எம்., கார்டு வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான பணி மத்திய,மாவட்ட சிறைகளில் நடந்து வருகிறது. இப்பணியை பார்ப்பதால் சிறை பணிகளில் கவனம் செலுத்துவது சிரமமாக உள்ளது என சிறை அலுவலர்கள் புலம்புகின்றனர்.அவர்கள் கூறியதாவது:விசாரணை கைதியின் பெயரில் வங்கி கணக்கு துவங்க விண்ணப்பம் பூர்த்தி செய்து வங்கிக்கு அனுப்புகிறோம். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஏ.டி.எம்., கார்டு வருவதற்குள் விசாரணை கைதி ஜாமினில் சென்றுவிடுகிறார். பல கைதிகள் வங்கி கணக்கு துவங்க விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு முறையான முகவரி கிடையாது. அவர்களின் ஆவணங்களை பெறுவதற்குள் 'போராட' வேண்டியுள்ளது. இதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் கைதிகளுக்கு அந்த வங்கி கணக்கையே சிறையில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் பெயரில் புதுக்கணக்கு துவங்குவதை தவிர்க்கலாம். நடைமுறை சிக்கலும் குறையும் என்றனர்.