| ADDED : டிச 08, 2025 06:13 AM
மேலுார்: மேலுார் தட்டான் கருப்பன் கோயில் ரோட்டில் அளவீடு செய்து உறுதி செய்த பின்பும் ஆக்கிரமிப்பை அகற்ற மறுப்பதாக நகராட்சி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது. இந்நகராட்சியின் மையப்பகுதியில் உள்ள தட்டான் கருப்பன் ரோட்டில் மருத்துவமனை, சிவன் கோயில், தபால், சார் பதிவாளர் அலுவலகங்கள், நகைக்கடைகள் உள்ளன. இது மெயின் ரோடு - அழகர் கோவில் ரோட்டின் இணைப்பு சாலையாக உள்ளது. 16 அடி அகலம் உள்ள ரோட்டை, டூவீலர் செல்லும் அளவிற்கு ஆக்கிரமித்துள்ளனர். அதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், சுவாமி ஊர்வலம், போக்குவரத்து எளிதாக இயங்க முடியாமல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி விஸ்வநாதன் கூறியதாவது: கட்டடம் கட்ட ஆய்வாளர் அனுமதி, வரி விதிக்க அளவீடு செய்த நகராட்சி அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் சிறப்பாக கவனிப்பதால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இந்த ரோட்டோரம் நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் கால்வாய் கட்டவே, ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாய் வரை கட்டடங்களை நீட்டித் துள்ளனர். இந்நிலையில் ரோடு அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளோம். தொடர்ந்து மனு கொடுத்ததால், ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்தனர். பின்பு பெயரளவுக்கு நோட்டீஸ் கொடுத்து, காலக்கெடு முடிந்தும் அதிகாரிகள் அகற்றாமல் விட்டு வைத்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது பொதுநல வழக்கு தொடர ஏற்பாடு செய்கிறோம் என்றனர். நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ''ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதாக கூறுவது தவறு. முறைப்படி ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. காலி செய்வதற்கு 2 நோட்டீஸ் கொடுத்ததும் போலீஸ் மற்றும் வருவாய் துறையினருடன் சேர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றார்.