உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒலிம்பிக் கிராமம் மதுரை ரேஸ்கோர்ஸில் ரூ.6 கோடியில் அமைகிறது: ஸ்குவாஷ் அரங்குகள் மட்டும் விடுபட்டு போச்சே

ஒலிம்பிக் கிராமம் மதுரை ரேஸ்கோர்ஸில் ரூ.6 கோடியில் அமைகிறது: ஸ்குவாஷ் அரங்குகள் மட்டும் விடுபட்டு போச்சே

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்படுகிறது. இதில் 'ஸ்குவாஷ்' போட்டிக்கான அரங்கு மட்டும் விடுபட்டுள்ளதால் அதையும் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இம்மைதானத்தில் சர்வதேச அளவில் செயற்கை தடகள டிராக், ஹாக்கி டிராக், இயற்கை புல்தரை கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கான 50 மீட்டர் நீச்சல்குளம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும் ரூ.6 கோடி மதிப்பில் ஒலிம்பிக் கிராமம் அமைக்க திட்டமிடப் பட்டது. இத்திட்டத்தின் கீழ் இன்டோர் தரைத்தளத்தில் 6 டேபிள் டென்னிஸ் கோர்ட், முதல் தளத்தில் கபடி கோர்ட் அமைக்கப்பட்டு வருகிறது. நவீன 'மல்டி ஜிம்' மைதானத்தின் முன்புற வாசலையொட்டி தனியாக 'மல்டி ஜிம்' அமைப்பதற்கென கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில் 'ஸ்குவாடு' எனப்படும் கழுத்தில் எடை துாக்கும் இயந்திரம், 'ஹிப் ரொட்டேட்டர்', நடைப்பயிற்சிக்கான டிரட்மில், ஜாக்கர் கருவிகள், இடுப்பு, வயிறு, தோள்பட்டை, தொடைப்பகுதிகளை வலுவாக்கும் தனிக்கருவிகள், 'மெடிசன் பால்' எனப்படும் இரும்பு குண்டுகள், டம்பிள்ஸ், கெட்டல் எனப்படும் மற்றொரு வகை டம்பிள்ஸ் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. தனியார் ஜிம்களுக்கு இணையாக உள்ள இந்த ஜிம்மில் ஆண், பெண்களுக்கான கழிப்பறை, ஷவருடன் கூடிய குளியலறை, உடைமாற்றும் வசதிகள் கட்டப்பட்டுள்ளன. விடுபட்டு போன விளையாட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 'ஸ்குவாஷ்' போட்டிக்கான அரங்கைத் தவிர அனைத்து விளையாட்டுகளுக்கான அரங்குகள் உள்ளன. இந்த போட்டிக்கு மட்டும் மாணவர்கள் பயிற்சி பெறாமலேயே மாவட்ட, மாநிலப் போட்டிகளுக்கு பங்கேற்கின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்குவாஷ்' விளையாடுவதற்கான வாய்ப்பே கிடைத்ததில்லை. இதற்கென உயரமான கான்கிரீட் தளத்துடன் பக்கவாட்டு கண்ணாடி தடுப்புச் சுவர்கள் பிரத்யேகமாக அமைக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள 'மல்டி ஜிம்' அரங்கின் மேல்தளம் மொட்டை மாடியாக உள்ளது. அந்த இடத்தில் 'ஸ்குவாஷ்' போட்டிக்கான இரண்டு அரங்குகளை எளிதாக அமைக்கலாம். ஏற்கனவே தரைத்தளம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்கள், கான்கிரீட் மேல்தளம் மட்டும் அமைத்தால் குறைந்த செலவில் அரங்கை அமைக்கலாம். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதற்கு முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி