மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல மனு:எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை சிலர் ஆக்கிரமித்து கடைகளை நடத்துகின்றனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படுகின்றன. கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். பஸ் ஸ்டாண்ட் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.அரசு பிளீடர் திலக்குமார்: பஸ் ஸ்டாண்ட் வெளிப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத்துறை அகற்றிவிட்டது.மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் விநாயக்: பஸ் ஸ்டாண்ட் உள் பகுதியிலுள்ள 184 கடைகளில் 180 கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிலர் பூ, பழங்கள் சிறு வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் ஆக்கிரமிக்கும் வகையில் நிரந்தர கட்டமைப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. உள் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இல்லை.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீலமேகம்: உள் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உள் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்புற சாலையில் இனி ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.