குன்றத்து கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை ரூ.31 லட்சத்துக்கு ஏலம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஆண்டு ரூ.18.18 லட்சத்திற்கு ஏலம் போன பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை இந்தாண்டு ரூ. 31.14 லட்சத்திற்கு ஏலம் போனது.இந்தாண்டு ஜூலை 1 முதல் அடுத்தாண்டு ஜூன் 30 வரை பல்வகை சில்லரை குத்தகை உரிமத்திற்கான பொது ஏலம் கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், மதுரை உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வாளர் இளவரசி முன்னிலையில் நடந்தது. பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை உரிமம் ரூ. 31.14 லட்சம், காணிக்கை முடி சேகரிக்கும் உரிமம் ரூ. 4.90 லட்சம், உயிர் பிராணிகளை சேகரித்துக் கொள்ளும் உரிமம் ரூ. 2.60 லட்சம், சரவணப்பொய்கையில் பரிகாரம் பால்குடம், காவடி செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் உரிமம் ரூ. 1.10 லட்சம், மலைக்கு பின்புறம் பால்சுனை கண்ட சிவன் கோயிலில் விசேஷ காலங்களில் தேங்காய்பழம், பூஜைப்பொருட்கள் விற்பனை கடை நடத்திக் கொள்ளும் உரிமம் ரூ. 2.09 லட்சம், கிரி வீதியிலுள்ள புளியமரங்கள், பனைமரங்களின்மேல் பலன்அனுபவித்துக் கொள்ளும் உரிமம் ரூ. 11.50 லட்சத்திற்கு ஏலம் போனது. சரவணப் பொய்கை கார் பார்க்கிங் ரூ.12.11 லட்சம், பூங்கா வாகன காப்பகம் ரூ.7.60 லட்சத்திற்கு ஏலம் போனது.