உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்சிகள்தான் மக்களை தேடிச் செல்ல வேண்டும்

கட்சிகள்தான் மக்களை தேடிச் செல்ல வேண்டும்

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது: 100 நாட்கள் நடைப்பயணம் நிகழ்ச்சி தொடர்பாக போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர். தற்போது நடை பயணத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவறான முன்னுதாரணம். அரசியல் கட்சிகள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். கட்சிகள் தான் மக்களை தேடிச் செல்ல வேண்டுமே தவிர மக்கள் கட்சிகளை தேடி வரக்கூடாது. நீதிமன்றம் சொல்லும் நிபந்தனை தேசிய,மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது என்பதுதான். தனியார் இடங்களில் நடத்திக் கொள்ளலாம் என்கின்றனர். அந்த இடம் ஊருக்கு வெளியில்தான் கிடைக்கும். அங்கு பொதுமக்கள் எப்படி வருவார்கள். ஊழல் செய்து கொள்ளையடித்த கட்சிகள்தான் மக்களை அழைத்துச் செல்ல முடியும். எங்களைப் போன்ற கட்சிகள் மக்களை சந்திக்க வேண்டும் என்றால் மக்கள் இருக்கின்ற மையமான பகுதிகளுக்கு தான் செல்ல முடியும். மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 1968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு விவசாயிகூட தற்கொலை செய்யக் கூடாது. இது அரசின் கடமை. ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கலாம் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதற்குப் பிறகும் தமிழக முதல்வர் மவுனமாக இருக்கிறார். இந்தியாவில் ஏழு மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடித்துவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் அதிகாரம் இல்லை என்று பொய்யை மீண்டும் சொல்லி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் 100 சதவீதம் பொய் கூறுகிறார், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !