ராமேஸ்வரம் - ஐதராபாத் இடையே ஸ்லீப்பர் வந்தே பாரத் இயக்கப்படுமா பயணிகள் எதிர்பார்ப்பு
மதுரை: ராமேஸ்வரம் - ஐதராபாத் இடையே மதுரை வழியாக படுக்கை வசதியுடைய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு, ஓகா - ராமேஸ்வரம் - ஓகா வாராந்திர ரயில் மட்டுமே உள்ளது. வெள்ளி தோறும் இரவு 10:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் (16733) ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, கரூர், சேலம், திருப்பதிவழியாக மறுநாள் இரவு 11:20 மணிக்கு கச்சிகுடா செல்கிறது.புதன் தோறும் மாலை 5:30 மணிக்கு கச்சிகுடா வரும்ரயில் (16734) மறுநாள் இரவு 7:10 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது.தமிழகத்தில் ராமேஸ்வரம், மதுரை, ஆந்திராவில் திருப்பதி, தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் மேற்கண்ட ரயில் மட்டுமே உள்ளதால் எளிதில் டிக்கெட் கிடைப்பதில்லை. இந்த ரயிலில் பயணம் 24 மணி நேரத்திற்கும் மேலாவதால் பயணிகள், குறிப்பாக முதியோர் அவதிக்குள்ளாகின்றனர். புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பின் ராமேஸ்வரத்திற்குசுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.தற்போது ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே மின்மயமாக்கல் பணிகள் நடக்கின்றன. மதுரை - மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிக்காக ரூ.3.02 கோடிக்கு தெற்கு ரயில்வே சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடியும்போது அனைத்து ரயில்களும் இவ்வழியாக இயக்கப்படும்.2026ல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட பணிகள் முடியும்போது இத்தடத்திலும் இவ்வகை ரயில்களை இயக்க வேண்டும். இதனால் 3 மாநிலத்தவர் பயனடைவர் என பயணிகள் தெரிவித்தனர்.தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் பத்மநாதன் கூறுகையில், ''தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ஆன்மிகத் தலங்களை இணைக்கும் வகையில் ராமேஸ்வரம் - ஐதராபாத் இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். இதனால் தென்மாநிலங்களில் இருந்து ஐதராபாத்துக்கு கல்வி, பணி, ஆன்மிகம் நிமித்தமாக செல்வோர்பயனடைவர்'' என்றார்.