வந்தே பாரத்தில் 16 பெட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தல்
மதுரை: 'திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டும்' என தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் பத்மநாதன் வலியுறுத்தினார்.செவ்வாய்க் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம்2:45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6:35க்கு திருச்சி, இரவு 8:20க்கு மதுரை வழியாக இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.சென்னை மட்டுமின்றி இவ்வழித்தடத்தில் உள்ள மற்ற ஊர்களுக்கும் செல்ல நேரம் ஒத்துப்போவதால் பயணிகளிடத்தில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சென்னைக்கு பல ரயில்கள் இருந்தும் வேகம், சவுகரியம் காரணமாக இதற்கான தேவை அதிகம் உள்ளதால், காத்திருப்போர் பட்டியல் எப்போதும் 100க்கும் மேல் உள்ளது. எனவே இந்த ரயிலை 16 பெட்டிகளுடன்இயக்க பயணிகளிடத்தில் எதிர்பார்ப்பு உள்ளது.இதுகுறித்து பயணிகள் சங்க பொதுச் செயலாளர் பத்மநாதன், ரயில்வே கூடுதல் பொது மேலாளர்கவுஷல் கிஷோரிடம் வலியுறுத்தினார். அவர் கூறுகையில், ''திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன்இயங்கினால் தென்மாவட்டத்தினர் அதிகம் பயன்பெறுவர். ரயில்வே துறைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். மற்ற ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் சென்னை செல்ல இந்த ரயிலை பயன்படுத்த முன்வருவர்'' என்றார்.