அந்தியோதயா ரயில் பிரேக் ஜாம் 4 மணி நேரம் தவித்த பயணிகள்
திருமங்கலம்: சென்னை தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் 'பிரேக் ஜாம்' காரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர்.இந்த ரயில் தினமும் காலை 8:50 முதல் 9:00 மணிக்குள் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்லும். நேற்று மதுரையில் இருந்து திருமங்கலம் வரும் வழியில் 'பிரேக் ரிலீஸ்' ஆகாமல் 'ஜாம்' ஆகியது. இதனால் ரயில் இன்ஜின் தண்டவாளத்தில் உரசியபடி வந்தது. ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதையடுத்து திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் காலை 8:50 மணிக்கு நிறுத்தப்பட்டது. மதுரை பொறியாளர்கள் சீரமைக்க முயன்றனர். ஆனால் இயலவில்லை. இதனால் மதுரையில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டது. 4 மணிநேர தாமதத்திற்கு பின் மதியம் 12:40 மணிக்கு ரயில் சென்றது. பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். முன்னதாக சிலர் பஸ்சில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.மதுரையிலிருந்து தென்பகுதிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனின் 2வது பிளாட்பாரம் வழியாக இயக்கப்படும். நேற்று 4 மணி நேரமாக அந்தியோதயா ரயில் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து ரயில்களும் 3வது பிளாட்பாரம் வழியாக மாற்றி அனுப்பப்பட்டன.