உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

பேரையூர்: பேரையூர் பகுதியில் பெய்த மழையால் கடலை சாகுபடி செய்தோரும், கால்நடை வளர்ப்போரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பேரையூர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் செம்மண் பகுதி என்பதால் நிலக்கடலை சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் நிலக்கடலை சாகுபடி அதிகமாக நடைபெறும். இந்தாண்டு பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். சில நாட்களாக மழை பெய்து வருவதால் நிலக்கடலை பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்நடை தீவனம் பேரையூர் வட்டாரத்தில் சில மாதங்களாக மழையின்றி கண்மாய்கள் வறண்டன. விளை நிலங்கள், ஓடை, கால்வாய்களில் புட்கள் கருகின. இதனால் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் இல்லாமல் சிரமப்பட்டனர். ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்வோர் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து திரிந்தனர். சிறுகுறு விவசாயிகள் பலர் கால்நடைகள் மூலமும் வருமானம் ஈட்டி வருகின்றனர். கடந்த மாதம் பெய்த மழையால் விளை நிலங்களில் புல், காட்டுக்கீரைகள், காளான்கள் செழித்து வளர்ந்துள்ளன. மேய்ச்சல் நிலம், தரிசு நிலங்கள், வயல்வெளிகளில் செடி, கொடிகள், புல் போன்றவை பச்சை பசேலென வளர்ந்து உள்ளதால் கால்நடைகள் அவற்றை விரும்பி உண்கின்றன. பசுக்களுக்கும் பால்சுரப்பு அதிகம் உள்ளது. பசுந்தீவனம் அருகிலேயே கிடைப்பதால், சில நாட்களுக்கு விலை கொடுத்து வேறு தீவனங்களை வாங்க வேண்டியது இல்லை என்பதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை