உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ட்ரோன் மூலம் நிலங்களில் பூச்சி மருந்து தெளிப்பு

ட்ரோன் மூலம் நிலங்களில் பூச்சி மருந்து தெளிப்பு

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாய வயல்களில் 'ட்ரோன்' மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.இப்பகுதியில் ஆடிப்பட்டத்தில் விதைத்த மக்காச்சோளம், பருத்தி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் மழையின்றி கருகி விட்டன. இதனால் மக்காச்சோளம், பருத்தி, கம்பு, உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களை மறு விதைப்பு செய்தனர். கடந்த மாதம் பெய்த மழையால் செடிகள் மீண்டும் முளைத்து பயிர்களாக உள்ளன. விவசாயப் பணிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான தொழிலாளர்கள் கிடைத்தனர். தற்போது பெரும்பாலான தொழிலாளர்கள் மாற்று வேலைக்கு சென்று விட்டனர். விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அறுவடை, கதிரடிக்கும் இயந்திரங்கள் மூலம் பாதியளவு விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பூச்சி மருந்து தெளிக்க ஆட்கள் பற்றாக்குறை நிலவியது. நோய் தாக்கிய பயிர்களை காப்பாற்ற உரிய நேரத்தில் பூச்சி மருந்து தெளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வாடகை அடிப்படையில் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கு பேரையூர் பகுதி விவசாயிகள் மாறி வருகின்றனர்.இதில் குறைந்த நேரத்தில் ட்ரோன்கள் மூலம் தெளித்து விடுகின்றனர். ஒரு ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்க ரூ.600 வாடகை நிர்ணயித்துள்ளனர். உரிய நேரத்தில் பூச்சி மருந்து தெளித்தால், பயிர்களை காப்பாற்றி நல்ல மகசூல் பெற வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை