வீல்சேர் கேட்டு தவழ்ந்து வந்த மூதாட்டி மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று டி.ஆர்.ஓ., அன்பழகன் தலைமையில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.72 ஆயிரம் மதிப்பில் ஒருவருக்கு செயற்கை கால், 14 பேருக்கு கலைஞர் கனவு இல்ல உதவித்தொகையுடன், ரூ. ஒரு லட்சம் வட்டியில்லா கடன்மானியம் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 14 பேருக்கு இலவச தையல் மிஷின்கள், 2 பேருக்கு அயலக கல்வி உதவித் தொகை ரூ.72 லட்சம் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுவாமிநாதன், தொழில்நெறி வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் வாஞ்சிநாதன், உதவிப்பொதுமேலாளர் லதா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். வீல்சேர் கேட்டு மனு உசிலம்பட்டி முதலைக்குளத்தைச் சேர்ந்தவர் மாயக்காள் 60. இருகால்களும் செயலிழந்த இவர் வீல்சேர் வேண்டும் என பலமுறை மனு செய்தும் கிடைக்கவில்லை. நேற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு அண்ணா பஸ்ஸ்டாண்டில் இருந்தே கடும் வெயிலில் தவழ்ந்தே வந்தார். தனக்கு ஆதரவு யாரும் இல்லை என்றவர், டி.ஆர்.ஓ.,விடம் மனு கொடுத்தார். திருப்பணிக்கு தனிக்குழு திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் தாலுகா சேடப்பட்டி ராஜேந்திரன் அளித்த மனுவில், 'மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் திருப்பணியில் எம் சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. கடுக்காய், சுண்ணாம்பு, மணலை பயன்படுத்த வேண்டும். தனிக்குழு அமைத்து பணிகளை கண்காணிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். ஆலை வேண்டும் வலைசேரிப்பட்டி சரவணன் மனுவில், 'மேலுாரில் 1967ல் துவங்கிய கூட்டுறவு நுாற்பாலை பலருக்கு வேலைவாய்ப்பை தந்தது. காலப்போக்கில் பயன்படுத்தப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இங்கு அரசு புதிய தொழிற்சாலையை அமைக்க வேண்டும். விளையாட்டு மைதானம் அமைக்கக் கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.