பெரா போராட்டத்தில் பங்கேற்பில்லை பெட்ரா அறிவிப்பு
மதுரை: 'பெரா' இன்று நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்' என 'பெட்ரா' அமைப்பு அறிவித்துள்ளது.வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'பெட்ரா' எனும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு போராடி வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், என்.ஜி.ஓ., சங்கம் போன்ற அனைத்துத்துறை ஊழியர்களின் சங்கங்களில் இணைவிப்பு பெற்ற பல்வேறு வருவாய்த்துறை அலுவலர்களின் சங்கங்கள் இணைந்து 'பெட்ரா' என்ற பெயரில் இயங்குகின்றன. இதேபோல தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் இணைவிப்பு பெற்ற 5 வருவாய்த்துறை அலுவலர் சங்கங்கள் இணைந்து 'பெரா' எனும் பெயரில் வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பாக, மேற்கண்ட கோரிக்கைகளையே வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் 'பெட்ரா' அமைப்பு சில மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தி, விரைவில் அரசு அழைத்துப் பேசும் நிலைக்கு சென்றுவிட்டது. அதேசமயம் இன்று (ஜூலை 3) போராட்டம் நடத்த 'பெரா' அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள், போலீஸ் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கும் இடையேயும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.போராட்டம் நடத்துவோர் அரசு அலுவலர், ஊழியர்கள் என்பது மட்டுமின்றி, ஒரே கோரிக்கைகளுக்காக, ஒரே மாதிரியான கூட்டமைப்பு பெயரில் போராட்டம் நடத்துவதாலும் இக்குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இதனால், 'பெரா' அமைப்பு நடத்தும் போராட்டத்தில் தாங்கள் பங்கெடுக்கப் போவதில்லை என்று 'பெட்ரா' அமைப்பு தெரிவித்துள்ளது.