ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஸ்டாலின் துரோகம் பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு
மதுரை: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி,'' என, மதுரையில் பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டினார். உரிமை மீட்க, தலைமுறை காக்க என்ற தலைப்பில் நடந்த யாத்திரையில் பங்கேற்ற அவர் பேசியதாவது: தமிழக மக்கள் தொகை 8 கோடியில் சென்னையில் மட்டும் 1.5 கோடி பேர் உள்ளனர். இதில் 50 லட்சம் பேர் தென்மாவட்டத்தினர். தென்மாவட்டத்தில் தொழில், வேலை வாய்ப்பு இல்லாததால்தான் ஜாதிச்சண்டை உள்ளது. தென்மாவட்டங் கள் வளர தொழிற்சாலை வேண்டும். மத்திய அமைச்சராக இருந்தபோது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினேன். மறுஆண்டு பதவி விலகி விட்டேன். அதன்பின் 3 ஆண்டுகாலம் தமிழகத்தில் தி.மு.க., பதவியில் இருந்தது. இந்த காலத்தில் இதனை அவர்கள் ஏன் கொண்டுவரவில்லை. அதை செய்யாமல், இன்று செங்கலை காட்டி அரசியல் செய்கின்றனர். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிள்ளை, பேரன்களை மறந்துவிடுங்கள். தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரை, பக்கத்து தெருவில், பள்ளி, கல்லுாரி எதிரே என எல்லா இடத்திலும் கிடைக்கிறது. என்னிடம் 6 மாதம் ஆட்சியை தந்தால், ஆறே நாளில் இந்த போதைப்பொருட்களை ஒழிக்க முடியும். அதற்கு மனதும், தைரியமும் வேண்டும். அவை முதல்வர் ஸ்டாலினிடம் கிடையாது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் தாய்மொழியை படிக்காமல் உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்பையெல்லாம் படிக்க முடிகிறது. பிற மாநிலங்களில் இப்படி முடியாது. மொழி, கலாசாரம், விவசாயம், பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தது தி.மு.க., ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அனைத்து குடும்பங்கள் பற்றியது. தமிழகத்தில் 2 கோடி குடும்பங்களில் 8 கோடி பேர் உள்ளனர். இந்த குடும்பங்களின் நிலை என்ன என்று அறிய, ரூ.500 கோடி செலவாகும். இதற்கு முன் 1931ல்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இன்று வரை வேலைவாய்ப்பு வழங்கினர். எனவே புதிய கணக்கெடுப்பு தேவை. இந்தியாவில் 7 மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ஸ்டாலின் தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்த தனக்கு அதிகாரமில்லை என்கிறார். தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளார் அவர். இவ்வாறு பேசினார்.