உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நஞ்சாகிறது கண்மாய் : ஏற்குடி அச்சம்பத்து கழிவுநீரால் மாடக்குளத்திற்கு பாதிப்பு

நஞ்சாகிறது கண்மாய் : ஏற்குடி அச்சம்பத்து கழிவுநீரால் மாடக்குளத்திற்கு பாதிப்பு

மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாய்க்கான நீர்வரத்து கால்வாய் சீரமைப்பிற்கு ரூ.17.53 கோடி ஒதுக்கி பணிகள் நடக்கும் நிலையில் ஏற்குடி அச்சம்பத்து பகுதி வாய்க்கால் சுவரை துளையிட்டு கழிவுநீரை வெளியேற்றுகின்றனர் அப்பகுதியினர். கொடிமங்கலம் அருகே வைகையாற்றின் குறுக்கே 2022 ல் ரூ.17.50 கோடி தடுப்பணை கட்டப்பட்டு 12.8 கி.மீ., நீள மாடக்குளம் கால்வாய் துார்வாரப்பட்டு கண்மாய்க்கு நேரடியாக தண்ணீர் விடப்பட்டது. இதன் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 365 ஏக்கர். 167 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடையது. தற்போது 300 ஏக்கர் வரையான பாசனத்திற்கு பயன்படுவதோடு 6 கி.மீ., சுற்றளவில் உள்ள லட்சக்கணக்கான குடியிருப்புகளின் நிலத்தடி நீர்மட்டத்திற்கு நேரடியாக உதவுகிறது. மொத்தமும் வீணாகிறது நாகமலை புதுக்கோட்டை அருகே ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் உள்ள மாடக்குளம் வாய்க்கால் வழியாக கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. வாய்க்கால் சுவர்களுக்குள் ஆயிரக்கணக்கான துளைகள் இட்டு அப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் சேர்க்கப்படுகிறது. அப்பகுதி குப்பை கொட்டும் இடமாகவும் மாற்றியுள்ளனர். 12.8 கி.மீ., நீள வாய்க்காலில் ஏற்குடி அச்சம்பத்தின் ஒன்றரை கி.மீ., நீள வாய்க்கால் தான் கழிவுநீரின் திறவுகோலாக மாடக்குளம் கண்மாயின் மொத்த நீரையும் மாசுபடச் செய்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண நீர்வளத்துறை சார்பில் ரூ.17.53 கோடி மதிப்பீட்டில் ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் பத்தடி உயர கான்கிரீட் வாய்க்கால் அமைத்து அதன் மேல் ஏழடி உயரத்திற்கு கம்பிவலை அமைத்து கழிவுநீர், குப்பை கொட்டுவதை தடுக்க திட்டமிடப்பட்டது. இந்தாண்டு பிப்ரவரியில் பணி தொடங்கப்பட்டு 3.4 கி.மீ., நீள கண்மாயின் கரைப்பகுதி 13 அடியாக அகலப்படுத்தப்பட்டது. வாய்க்காலில் 80 சதவீத அளவு கான்கிரீட் சுவர் அமைத்த நிலையில் மீண்டும் சுவரை துளையிட்டு பி.வி.சி., குழாய்களை பொருத்தி வாய்க்காலுக்குள் கழிவுநீரை அப்பகுதியினர் வெளியேற்றுகின்றனர் என்கிறார் மாடக்குளம் நீரினை பயன்படுத்தும் பாசனதாரர் சங்கத் தலைவர் மாரிச்சாமி. அவர் கூறியதாவது: பரவையில் நடந்த 'மக்களோடு முதல்வர்' திட்ட முகாமில் கழிவுநீரை வாய்க்காலில் விடுவதை தடுக்க வேண்டும் என மனு கொடுத்தோம். கோயிலைத் தவிர மீதியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. வாய்க்காலில் மின்வாரியத்துறை மின்கம்பங்களை ஊன்றியுள்ளன. அதை அகற்றச் சொன்னால், அதற்கான செலவுத்தொகையை நீர்வளத்துறை கொடுத்தால் மட்டுமே வேறிடத்தில் ஊன்ற முடியும் என மின்வாரிய அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இதனால் வாய்க்காலில் சுவர் கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பணிகள் நடக்கும் போதே மீண்டும் சுவரை துளையிட்டு கழிவுநீரை வெளியேற்றுவதால் ரூ.17.53 கோடி செலவழித்தும் மாடக்குளம் கண்மாயில் கழிவுநீரை சேருவதை தடுக்கமுடியவில்லை. மூன்றாண்டுகளில் ரூ.35 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ள மின்வாரியமே மின்கம்பங்களை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். ஏற்குடி அச்சம்பத்து கழிவுநீர், குப்பை பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை