போலீஸ் செய்திகள்...
கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
வாடிப்பட்டி: சமயநல்லுார் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும்போலீசார் பரவை கொண்டமாரி பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். டூவீலரில் கஞ்சாவுடன் நின்ற மதுரை முனிச்சாலை மணிபாண்டி 32, மேலவாசல் தர்மராஜ் 23, எல்லீஸ் நகர் வைரமுத்துவை 23, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சா, ரூ.400, ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. புது மாப்பிள்ளை தற்கொலை
திருமங்கலம்: ஆலம்பட்டி அருகே ஆண்டிபட்டியைச்சேர்ந்தவர் சுந்தரபாண்டி 26, இவருக்கும் முத்துகிருஷ்ணாபுரம் பாண்டி மகள் சத்யாவுக்கும் 23, மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு பாண்டி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அதற்காக கணவன் மனைவி இருவரும் முத்துக்கிருஷ்ணாபுரம் சென்றனர். இருவாரங்களுக்கு மேல் அங்கேயே தங்கி இருந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆண்டிப்பட்டிக்கு தனியாக வந்த சுந்தரபாண்டி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். பெண்ணிடம் செயின் பறிப்பு
திருமங்கலம்: கள்ளிக்குடி சத்திரத்தை சேர்ந்த பனையப்பன் மனைவி தெய்வானை 29, பனையப்பன் மதுரை ரோட்டில் மெடிக்கல் ஸ்டோர் வைத்துள்ளார். தெய்வானை அவருக்கு உதவியாக கடையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பனையப்பன் வெளியில் சென்றிருந்த நிலையில் தெய்வானை மட்டும் இருந்தார். அப்போது ஒரே டூவீலரில் வந்த நபர்களில் ஒருவர் மெடிக்கலுக்கு வந்து தலைவலி மாத்திரை தேவை எனக் கேட்டு உள்ளார். தெய்வானை மாத்திரையை எடுத்து கொடுத்தபோது அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயினை பறிக்க முயன்றார். தெய்வானை தாலியை இறுகப் பிடித்துக் கொண்டு அலறினார். செயினில் ஒரு பாதி தப்பிய அந்த நபரின் கையோடு போனது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர். ஒருவர் கைது
மேலுார்: எஸ்.ஐ., ஆனந்த ஜோதி தலைமையில் போலீசார் திருவாதவூர் ரோடு, கருத்தபுளியம்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது மில்கேட் பாலத்தில் இரும்பு வாள் வைத்துக் கொண்டு மக்களை அச்சுறுத்திய கருத்த புளியம்பட்டி நல்லரசுவை 23, கைது செய்தனர். விபத்தில் அலுவலக உதவியாளர் பலி
பேரையூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அய்யம்பட்டி நந்தகுமார் 32. ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாடு வனத்துறை துணை இயக்குனர் அலுவலக அலுவலக உதவியாளர். நேற்று காலை அலுவலக வேலையாக டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை சென்றார். வேலை முடிந்து, டி.குன்னத்தூர் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் இறந்தார். காரை ஓட்டி வந்த மதுரை பழங்காநத்தம் வாஹித் சபிக்ஷாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.