போலீஸ் செய்திகள்... மதுரை
மிரட்டியவர் மீது புகார் திருமங்கலம்: பிரதமர் மோடி, பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை மரியாதை குறைவாக பேசியதுடன், அண்ணாமலைக்கு வி.சி.கட்சி பிரமுகர் சிறுத்தைக்கனி மிரட்டல் விடுத்தார். 'தமிழகத்தில் பா.ஜ., வினர் கட்சி வேட்டியுடன் செல்ல முடியாது. எங்கு பார்த்தாலும் அடித்து விரட்டி கொன்று விடுவோம்' என மிரட்டும் தொனியில் பேசியதாக மதுரை பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் பா.ஜ., வினர் திருமங்கலம் ஏ.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். --- கொலை வழக்கில் கைது மேலுார்: கொடுக்கம்பட்டி ஆசைத்தம்பிக்கும், தனுஷ்கோடிக்கும் சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் செப். 29ல் தனுஷ்கோடி உள்ளிட்ட 8 பேர் தாக்கியதில் ஆசைத்தம்பி இறந்தார். இவ்வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வாச்சாம்பட்டி பாண்டியை 41, கீழவளவு போலீசார் நேற்று கைது செய்தனர். குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி திருமங்கலம்: அசோக் நகரை சேர்ந்த மூவேந்திரன் 34, மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி குருசியா 23, நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். மூவேந்திரன் அடிக்கடி குடிபோதையில் வீட்டாருடன் தகராறு செய்தார். இதில் விரக்தி அடைந்த குருசியா, நேற்று அதிகாலை 2 குழந்தைகளையும் துாக்கில் தொங்கவிட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குழந்தைகள் வலியில் துடிப்பதை பார்த்த அவர், உடனே தன்னை விடுவித்துக் கொண்டு குழந்தைகளையும் மீட்டார். அருகில் இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.