சித்திரைத்திருவிழா பாதுகாப்பை சிறப்பாக செய்து பாராட்டை பெற்ற போலீசார் ஏ.ஐ., தொழில்நுட்ப திட்டங்களுடன் அசத்தல்
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவில் இந்தாண்டு எந்த குற்றமும் நடக்காத வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையிலும் புதுமையான திட்டங்களை செயல்படுத்திய கமிஷனர் லோகநாதன் தலைமையிலான போலீசார் பொதுமக்களின் பாராட்டை பெற்றனர்.மதுரை சித்திரைத்திருவிழாவில் சில ஆண்டுகளாக கூட்ட நெரிசல், ரவுடிகள் மோதல், வெட்டு, கொலை என தொடர்ந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தாண்டு போலீஸ் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. திருவிழா தொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த முதல் ஆலோசனைக்கூட்டத்தில், மீனாட்சி கோயில் தேரோட்டம் செல்லும் மாசி வீதிகள், ஆற்றில் அழகர் இறங்கும் பகுதியில் என்னென்ன குறைகள் உள்ளன என போலீஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டு சரிசெய்யப்பட்டது.அதைதொடர்ந்து கமிஷனர் தலைமையில் அடுத்தடுத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கடந்தாண்டுகளில் நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்தாண்டு அதுபோன்று நடக்காமல் இருக்க போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவானது. 9 எஸ்.பி.,க்கள் தலைமையில் 3600 போலீசார், 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் திருவிழாவிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.ஆற்றில் அழகர் இறங்கும் அதிகாலையில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், முதல் நாள் இரவு 9:00 மணிக்கே போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆற்றுப்பகுதியில் கூட்டம் சீராக பரவலாக்கப்பட்டது. குறிப்பாக கோரிப்பாளையம் முதல் ஆழ்வார்புரம் வைகை வரை 5 தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தடையின்றி அனுப்பப்பட்டனர். ஆற்றில் அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தவர்கள் அடுத்ததாக ராமராயர் மண்டபத்திற்கு செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆற்றுப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஆற்றில் அதிக நீர் வந்ததால் நீச்சல் தெரிந்த 20 போலீசார் தயாராக இருந்தனர். பெற்றோரிடம் இருந்து காணாமல் போவதை தடுக்க 10 ஆயிரம் குழந்தைகளின் கையில் பெற்றோர் பெயர், அலைபேசி எண் எழுதப்பட்ட 'டேக்' அணிவிக்கப்பட்டது. வழிதவறிய 2 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 66 பேர் கைது
கூட்டத்தில் ரவுடிகள், திருடர்கள், சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தால் அந்நபரை மட்டும் சுட்டிக்காட்டி 'அலர்ட்' செய்யும் ஏ.ஐ., தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்த எச்சரிக்கும் ஆடியோ பதிவுடன் ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டன. அதேசமயம் 7 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 51 குழுக்கள் நகரின் அனைத்து பகுதிகளிலும் இரவு முதல் அதிகாலை ரோந்து வந்து 30 ரவுடிகள் உட்பட 66 பேரை கைது செய்தது. இதில் 10 பேரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றங்கள் நடக்க வாய்ப்பிருந்த இருட்டான பகுதிகளில் 300 விளக்குகள் தற்காலிகமாக பொருத்தப்பட்டன. புறநகரில் 2300 போலீசார்
அழகர்கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு மதுரை வரும் வரை தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, எஸ்.பி. அரவிந்த் தலைமையில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் அழகர்கோவிலுக்கு சுவாமி புறப்பட்டு கோயில் சேரும் வரை 900 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இங்கும் தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.சரியான திட்டமிடுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பிற துறைகளின் ஒத்துழைப்பு போன்ற காரணங்களால் இந்தாண்டு ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்காமல் சித்திரைத்திருவிழாவை சிறப்பாக நடத்திய கமிஷனர் லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, எஸ்.பி., அரவிந்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.