| ADDED : ஜன 31, 2025 07:29 AM
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் பிப்.4ல் திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்துவதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதன் எதிரொலியாக திருப்பரங்குன்றத்திலுள்ள திருமண மண்டபங்களுக்கு போலீசார் கெடுபிடி விதித்துள்ளனர். இதற்கு ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றத்தில் 72 திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் 6 மண்டபங்கள் தவிர மற்றவை மாநகராட்சி உரிமம் உட்பட போலீஸ் உரிமம் ஏதும் பெறப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மண்டப உரிமையாளர்களுக்கு போலீசார் அளித்துள்ள நோட்டீசில், 'பல திருமண மண்டபங்களின் அறைகளில் வெளியூர் பயணிகள் தங்க வாடகைக்கு விடுவது தெரிகிறது. இது திருமண மண்டபங்கள் நடத்தும் விதிமுறைகளுக்கு எதிரானது.அறைகளில் வந்து தங்கி செல்லும் பயணிகளின் சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு மண்டப உரிமையாளர்களே பொறுப்பு. சட்ட விதிகளின்படி குற்ற வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போது மண்டபங்களில் போலீசார் அனுமதியின்றி தன்னிச்சையாகவும் உள் அரங்கு கூட்டங்கள் நடத்தி அது தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு பொது அமைதிக்கு இடையூறு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அதுபோன்ற கூட்டங்களுக்கு மண்டபங்களை ஒதுக்கீடு செய்து தர வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சுந்தரவடிவேல், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: இது ஜனநாயகத்திற்கு எதிரானது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள் எங்கு சென்று தங்குவார்கள். போலீசாரின் இந்நடவடிக்கையால் வெளிமாநிலங்கள், வெளி மாவட்ட பக்தர்களுக்கு அச்சம் ஏற்படும், என்றனர்.