அரசு திட்டங்களில் அரசியல் தலையீடு; சலுகை கிடைக்காத விவசாயிகள் ஏக்கம்
மதுரை : வேளாண் துறையில் அரசியல் தலையீட்டால் சில கிராமங்களுக்கு மட்டும் கே.ஏ.வி.ஐ.டி.பி. திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் வேளாண் துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம் (கே.ஏ.வி.ஐ.டி.பி.) கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் மாவட்டத்தின் ஒரு சில வட்டாரங்களில் உள்ள குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கிராம விவசாயிகளுக்கு தரிசு நில மேம்பாட்டு, விதை, உரம், இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள் சேர்க்கப்பட்டாலும் மற்ற பகுதி விவசாயிகளுக்கான சலுகைகள் கிடைக்கவில்லை என்கிறார் உசிலம்பட்டி விவசாயி வைரத்தேவன்.அவர் கூறியதாவது: 2021க்கு முன் வரை விவசாயத்துறையில் அரசியல் தலையீடு வெளியே தெரியவில்லை. 25 விவசாயிகள் இருந்தால் எங்களுக்குள் ஒருவரைத் தான் (அட்மா திட்டம்) தலைவராக தேர்ந்தெடுப்போம். இப்போது அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதால் அட்மா திட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் அதிகம் உள்ளனர்.கே.ஏ.வி.ஐ.டி.பி. திட்டத்தின் கீழ் 2021 முதல் தற்போது வரை சில கிராம விவசாயிகளுக்கே விதை, இடுபொருட்கள், வேளாண் கருவிகளை மானியத்தில் தருகின்றனர். பண்ணை குட்டை, மீன்பண்ணை வளர்ப்பு திட்டமாக இருந்தாலும் கடப்பாரை, கம்பி, மண்வெட்டி, அரிவாள், கோடாரி கேட்டாலும் இதே பதில் தான் சொல்கின்றனர். மழை பெய்த நிலையில் விதைப்பதற்கு சோளம் கேட்டால், தத்தெடுத்த கிராமத்திற்கு தான் தரப்படும். உங்கள் கிராமத்தை தத்தெடுக்கும் போது வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர். எப்போது எங்கள் கிராமத்தை தத்தெடுப்பார்கள். தத்தெடுக்கும் வரை மற்ற விவசாயிகள் மானியத்திற்கு எங்கே போவார்கள் என்றார்.