மத்திய சிறைகளில் 6 மாதங்களாக பேண்டேஜ், பைல் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி நிறுத்தம்: டி.ஜி.பி., அலுவலகம் மூலம் இனி ஆர்டர் பெறப்படும்
மதுரை: தமிழக மத்திய சிறைகளில் ஊழல்களை தடுக்க இனி அத்துறை டி.ஜி.பி., அலுவலகம் மூலமே ஆர்டர் பெறப்பட்டு அரசு துறைகளுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை நடைமுறைப்படுத்த கால தாமதம் ஆவதால் 6 மாதங்களாக சிறைகளில் பேண்டேஜ், பைல் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு துறைகளில் அப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளன. ஒவ்வொரு சிறையிலும் குறிப்பிட்ட பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக மதுரை சிறையில் அரசு மருத்துவமனைகளுக்கான நுால் பேண்டேஜ், அலுவலக கவர்கள், பைல்கள், வேலுார் சிறையில் காலணி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. சிறைகளுக்கு நேரடியாக ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இதில் மதுரை, நெல்லை, கடலுார் சிறைகளில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுரை சிறையில் நடந்த ஊழல் தொடர்பாக அப்போதைய எஸ்.பி., ஊர்மிளா உள்ளிட்டோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஊழல்களை தடுக்க சிறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் முடிவுசெய்தார். இதன்படி அந்தந்த சிறைகள் நேரடியாக அரசு துறைகளிடம் ஆர்டர் பெறக்கூடாது. என்ன பொருட்கள், எவ்வளவு தேவை என டி.ஜி.பி., அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறைக்கு தெரிவிக்கப்பட்டு பொருட்கள் உற்பத்தி செய்து அனுப்பப்படும். அரசு துறைகளுக்கு இதுதொடர்பாக டி.ஜி.பி., கடிதம் எழுதியுள்ளார். இதற்கான நடைமுறை 6 மாதங்களாக நடந்து வருகிறது. அத்துறைகளிடமிருந்து ஆர்டர்கள் வர தாமதம் ஆனதால் 6 மாதங்களாக எந்த பொருட்களும் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் அப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, தனியாரிடம் இருந்து அரசு துறைகள் வாங்கி வருகின்றன. டி.ஜி.பி., அலுவலகம் தரப்பில் கூறுகையில், ''வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பரில் புதிய ஆர்டர்கள் பெறப்பட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். இந்தாண்டு புதிய நடைமுறையால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகளுக்கு 15 லட்சம் மீட்டர் மருத்துவ பேண்டேஜ் தயாரிக்க சுகாதாரத்துறை ஆர்டர் கொடுத்துள்ளது. ஓரிருநாளில் உற்பத்தி துவங்கும்'' என்றனர்.