ஊதிய முரண்பாட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் : டிக்டோ - ஜாக் அறிவிப்பு
மதுரை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜூலை 16 முதல் 18 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என டிக்டோ - ஜாக் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிக்டோ - ஜாக்) போராட்ட ஆயத்தக் கூட்டம் மாநில கொள்கை விளக்கச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. பொறுப்பாளர்கள் கணேசன், பீட்டர் ஆரோக்கியராஜ், சீனிவாசன், பாரதிசிங்கம், மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். தீர்மானங்கள்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான தர ஊதியத்திற்கு விதிக்கப்பட்ட தவறான தணிக்கை தடையை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்த வேண்டும். வரும் ஜூலை 16, 17, 18ல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் ஆக.,8ல் கோட்டை மறியல் போராட்டம் நடத்தப்படும். போராட்டத்திற்கான பிரசார பயணம் வட்டார அளவில் நாளை (ஜூலை 7) மாலை நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.