உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்வளத்துறையில் 90 சதவீத பிரச்னைகள் காலாண்டு கூட்டம் நடத்த வேண்டும்

நீர்வளத்துறையில் 90 சதவீத பிரச்னைகள் காலாண்டு கூட்டம் நடத்த வேண்டும்

மதுரை: மாதம் ஒரு முறை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் 90 சதவீதத்திற்கு மேலான மனுக்கள் நீர்வளத்துறை தொடர்பாக இருப்பதால் 3 மாதங்களுக்கு ஒருமுறை நீர்வளத்துறை தனியாக கூட்டம் நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாரதிய கிசான் சங்க மாநிலத்தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது: விவசாயிகளுக்கான நிறைய பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் உள்ள குறைகள், மதுரை வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறையில் உள்ள வாய்ப்புகள், பூச்சி, நோய் மேலாண்மை பிரச்னை குறித்து குறைதீர் கூட்டத்தில் விவாதிக்க முடியவில்லை. விவசாயிகள் தரும் 90 சதவீத மனுவில் கண்மாய் கரை பலவீனம், கலுங்கு, கால்வாய் ஆக்கிரமிப்பு போன்ற பிரச்னைகளே வருகின்றன. இதற்கு மாதந்தோறும் கூட்டம் நடத்தினாலும் நீர்வளத்துறை மூலம் தீர்வு கிடைப்பதே இல்லை. அந்த நேரத்தில் உதவிப் பொறியாளர்கள் வேலை செய்து தருவதாக கூறினாலும் தொடர்ந்து அதை பின்பற்றுவதில்லை. எனவே 3 மாதங்களுக்கு ஒருமுறை நீர்வளத்துறை சார்பில் தனியாக கூட்டம் நடத்தி மனுக்களுக்கு தீர்வு கண்டது குறித்து தெரிவிக்க வேண்டும்.

பாசனதாரர் பட்டியல் தேவை

நீர்வளத்துறை கண்மாய் மூலம் பாசனம் பெறும் பட்டா வைத்துள்ள நிலத்தின் உரிமையாளர்கள் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்கலாம். பெரும்பாலான நில உரிமையாளர்களின் பட்டாக்கள் தாத்தா, தந்தை ஆகியோரின் பெயரில் உள்ளதால் ஓட்டெடுப்பில் பங்கேற்க முடியவில்லை. இதுகுறித்து விவசாயிகளுக்கு நீர்வளத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலம், பட்டா வைத்துள்ள உண்மையான விவசாயிகளை கண்டறிந்து சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ