‛ பொய் பேசாத ஊருக்கு களங்கமாகி விட்டதே; முன்னாள் ஊராட்சி தலைவர் வருத்தம்
சிங்கம்புணரி: கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவரை போலீசார் சுட்டுப் பிடித்த நிலையில் அவர்களில் குணா (எ) தவசி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சகோதரர்களான சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் சிவகங்கை மாவட்டம் எஸ். கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரிந்தது. தங்கள் கிராமத்து பெயருக்கு களங்கம் ஏற்படுத் தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மு.சூரக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்.சண்முகராஜா. அவர் கூறியதாவது கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், மு.சூரக்குடி ஊராட்சி எஸ். கோவில்பட்டியை சேர்ந்த 2 பேர் ஈடுபட்டுள்ளதை போலீசார் மூலம் தெரிந்து கொண்டோம். அந்த இருவரின் தந்தை தமிழ்மணிக்கு இந்த ஊர் தான். 30 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் வேலை பார்த்தபோது கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து அழைத்து வந்து விட்டார். அப்பெண்ணுக்கு பிறந்தவர்கள் தான் இந்த காளீஸ்வரன், கருப்பசாமி. 25 ஆண்டுகளுக்கு முன்பே ஊரை காலி செய்து கோவை சென்று விட்டனர். பிறகு தமிழ்மணி இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. அவர்களோடு எங்கள் கிராமத்திற்கு எந்த தொடர்போ போக்குவரத்தோ இல்லை. எங்கள் கிராமம் செகுட்டையனார் அருள்பாலிக்கும் புண்ணிய பூமி. இந்த ஊரை சேர்ந்தவர்கள் ஐயனாருக்காக குழந்தை பிறந்ததும் காதில் துளை போட்டு கொள்பவர்கள். பொய் சொல்லவோ, குற்றச்சம்பவங்களுக்கோ செல்லமாட்டார்கள். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்த கிராமத்திலிருந்து வேலைக்கு செல்பவர்களுக்கு எப்போதும் நற்பெயர் உண்டு. அப்படிப்பட்ட ஊரின் பெயருக்கு இருவரும் களங்கம் விளைவித்து இருப்பது மனவேதனையை அளிக்கிறது. சட்டப்பட்டி அவர்களுக்கு அதிக தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றார்.