மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்
மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மதுரை மேற்கு வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த 31 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளானது.மழை பாதித்த பகுதிகளை வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், உதவி இயக்குநர் பாலமுருகன் ஆய்வு செய்தனர். இணை இயக்குநர் கூறியதாவது: சின்னப்பட்டி, வெளிச்சநத்தம், தெற்கு பெத்தாம்பட்டி, மஞ்சம்பட்டி, மந்திகுளம் பகுதியில் 31 ஏக்கரில் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளானது.இதில் 75 சதவீதம் அறுவடைக்கு 10 நாட்கள் உள்ள நிலையிலும், மீதிப் பயிர்கள் பூக்கும் தருணத்திலும் இருந்தது. வயலில் தேங்கிய தண்ணீரை வடித்து விடும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஒரு சில இடங்களில் நெற்கதிர்கள் சாய்ந்து தேங்கியுள்ள மழைநீரில் முளைக்க ஆரம்பித்துள்ளது. கள்ளிக்குடி ஓடைப்பட்டியில் 5 ஏக்கர் பாசிப்பயறு வயலும் மழைநீர் தேங்கி சேதமாகியுள்ளது.பாதிப்பின் அளவு மூன்றில் ஒரு பங்காக (33 சதவீதம்) இருந்தால் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும். தொடர் மழையால் பாதிக்கப்பட்டால் வட்டார வேளாண் உதவி இயக்குநர், வேளாண் அலுவலர், துணை அலுவலர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.