ரேஷன் அரிசி கடத்தல்: வீடியோ வைரல்
உசிலம்பட்டி; செல்லம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில் விற்பனையாளராக கிருஷ்ணன், எடையாளராக இளையராஜா பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு, பணியாளர்கள் இல்லாத நிலையில் சிலர் கடையில் இருந்து 40 மூடை ரேஷன் அரிசியை கடத்தி வேனில் ஏற்றி புறப்பட தயாராகினர்.அப்போது கிராம இளைஞர்கள் சிலர் வேனை மடக்கி பிடித்தனர். மூடை மூடையாக ரேஷன் அரிசியை கடத்துகின்றனர் எனக்கூறியபடி வீடியோ எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டனர்.உத்தப்பநாயக்கனுார் போலீசார், தாலுகா விநியோக அதிகாரி மயிலேறிநாதன், வி.ஏ.ஓ., ராமகிருஷ்ணனிடமும் புகார் தெரிவித்தனர். அரிசியுடன் வேனை எடுத்து மந்தை முன்பாக கொண்டு செல்ல முயன்ற போது, இளைஞர்களை ஏமாற்றிய மர்மநபர்கள், திடீரென வேனை ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிப் பதிவுகளுடன், வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் பேரில் வேனின் பதிவு எண்ணை வைத்து கடத்தியவர்களை உத்தப்பநாயக்கனுார் போலீசார் தேடி வருகின்றனர்.