பேரையூரில் பொங்கலுக்கு தயாரான செங்கரும்பு
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க அளவில் செங்கரும்பு சாகுபடியை இப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தாதன்குளம், செங்குளம், கோபிநாயக்கன்பட்டி, முருகனேரி, பாறைப்பட்டி பகுதிகளில் செங்கரும்பு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் துவக்கத்தில் செங்கரும்பு நடவு செய்வர். அறுவடை செய்யும் போதே அடுத்த நடவுக்கு என கரும்புத் தட்டைகளை ஒதுக்கி விடுவர். அவற்றை இரண்டு அல்லது மூன்று கணுக்களாக விட்டு, துண்டுகளாக நறுக்கி விதைக் கரும்பு தயார் செய்வர். அவற்றை நீளவாக்கில் வாய்க்கால் போல் பாத்தி கட்டிய வயலில் தண்ணீர் பாய்ச்சி நடவு செய்ய வேண்டும். உரமிடுதல், தோகை உரித்தல், வேர் பூச்சி தாக்குதலில் இருந்து காப்பது என பக்குவமாக வளர்க்க வேண்டும். வாரத்தில் 2 அல்லது 3 முறை சீரான தண்ணீர் பாய்ச்சினால் போதும். மழைக்காலங்களில் கரும்புத் தட்டைகள் சாய்ந்து விடாதவாறு பாத்திகளில் தண்ணீர் தேங்காமல் வடிகால் அமைத்து பராமரிக்க வேண்டும். அடுத்த 10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களே உள்ள நிலையில் பேரையூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்பு அறுவடை செய்ய தயாராக வளர்ந்து விட்டன. விவசாயிகள் கூறுகையில், ''இந்தாண்டு மழை போதியளவு இருந்ததால் செங்கரும்பு நன்றாக வளர்ந்து உள்ளது. கரும்புத் தேவையும் அதிகரித்து உள்ளது. நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.