அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கை: ஓராண்டாகியும் உயிரில்லாத முதல்வர் உத்தரவு
மதுரை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து ஓராண்டாகியும் நடைமுறைக்கு வரவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் (என்.எச்.ஐ.எஸ்.,) அமலில் உள்ளது. இதற்காக ஒவ்வொருவரிடமும் சம்பளத்தில் மாதம் ரூ. 300 பிடித்தம் செய்யப் படுகிறது. ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 5 லட்சம் வரையிலும், குறிப்பிட்ட சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரையும் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையாக அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் தகுதியானவர்கள் ஆவர். ஆனால் பெற்றோர் சேர்க்கப்படவில்லை. இதில் பெற்றோரையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்தாண்டு சட்டசபை மானியக் கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தாய், தந்தையும் பயனாளிகளாக சேர்க்கப்படுவர். அதற்கேற்ப புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப்படும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அதுதொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: முதல்வர் உத்தரவு ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. முதல்வர் உத்தரவை செயல்படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை. ஆனால் முதல்வர் அறிவிப்புக்கு பின் அதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனால் அதற்கான தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் நலன் கருதி அவர்களை சார்ந்த வாழும் பெற்றோரும் இத்திட்டத்தில் சேர்க்கும் வகையில் இனியாவது உரிய திருத்தப்பட்ட உத்தரவை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்றார்.