மதுரையில் கொத்தடிமைகள் மீட்பு
கள்ளிக்குடி; மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்ட 11 பேர் மீட்கப்பட்டனர்.குராயூர் கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக சிலர் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் சங்கீதாவுக்கு தகவல் கிடைத்தது. ஆர்.டி.ஓ., ராஜகுரு, தாசில்தார் சிவக்குமார், எஸ்.ஐ., முத்துராஜா, சமூக நலத்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் கரும்பு தோட்டத்தில் விசாரித்தனர். கர்நாடகா மாநிலத்தில் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 11 பேரை இரண்டு கை குழந்தைகளுடன் கரும்பு வெட்ட குராயூருக்கு ஜன.13-ல் அழைத்து ஏஜன்டுகள் சிலர் வந்துள்ளனர். இங்கு அழைத்துவரப்பட்டதிலிருந்து அவர்களுக்கு உரிய சம்பளம், உணவு உள்ளிட்டவை வழங்கப்படாமலும் இருந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை தோட்டத்திலிருந்து வெளியில் செல்லவும் உரிமையாளர் மற்றும் அழைத்து வந்த ஏஜன்ட்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.