உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முடிவுக்கு வந்தது வருவாய் அலுவலர்கள் போராட்டம்

முடிவுக்கு வந்தது வருவாய் அலுவலர்கள் போராட்டம்

மதுரை: 'கலெக்டருடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஊழியர்கள் 3 பேரின் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து உட்பட கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்ததால்' வருவாய் அலுவலர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் வி.சி.க.,வினர் அனுமதியின்றி கொடிக்கம்பம் நடுவதாக கூறி போலீஸ், வருவாய்த் துறையினர் தடுத்ததால் பிரச்னை உருவானது. இதில் கிராம உதவியாளர் பழனியாண்டி, வி.ஏ.ஓ., பரமசிவம், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். துணைத் தாசில்தார் ராஜேஷூக்கு 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.இதையடுத்து வருவாய்த் துறையின் 9 சங்கங்களும் ஒட்டுமொத்தமாக திரண்டு போராடினர். ஈட்டிய விடுப்பு எடுத்து, 2 நாட்களாக கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான நேற்று காலை முதலே மழை பெய்ததால், குடைகளை பிடித்துக் கொண்டும், மழைக் கோட் அணிந்தும் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர் எம்.பி.முருகையன் தலைமை வகித்தார். இந்நிலையில் நேற்று மதியம் கலெக்டர் சங்கீதா பேச்சுவார்த்தை நடத்தினார். பணிநீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் மூவருக்கும் அதே பணியிடம் வழங்கப்படும். குற்றச்சாட்டு குறிப்பாணை கைவிடப்படும். களப்பணியாற்றும் வருவாய் அலுவலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !