உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனுக்களோடு மல்லுக்கட்டும் வருவாய் அலுவலர்கள்

மனுக்களோடு மல்லுக்கட்டும் வருவாய் அலுவலர்கள்

மதுரை: மக்கள் குறைதீர் கூட்டம், உங்களோடு ஸ்டாலின் போன்ற திட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் தாசில்தார்கள் உட்பட வருவாய் அலுவலர்கள் தினமும் போராடி வருகின்றனர். அரசு துறைகளின் தாய்த்துறையான வருவாய்த்துறையில் தினமும் மனுக்கள் குவிவதால் அவற்றோடு மல்லுக்கட்டுவதே தங்கள் பணியாகிவிட்டதாக வருவாய் அலுவலர்கள் புலம்புகின்றனர். திங்கள்தோறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 600 முதல் ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன. இவற்றில் 80 சதவீதம் வருவாய்த்துறை தொடர்பானவையே. கலெக்டரிடம் வழங்கும் அனைத்தும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றுக்கு 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்ற நிலையில் பட்டா தொடர்பான மனுக்களுக்கு தீர்வுகாண பலமாதங்கள் ஆகிறது. தற்போது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஜூலை 15 முதல் ஆக.15 வரை நடக்கிறது. இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன. இம்முகாம்களில் 4 கவுன்டர்கள் அமைத்து மனுக்களை பெற அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் வரும் கூட்டத்தை சமாளிக்க 20 கவுன்டர்கள் வரை அமைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெறுகின்றனர். இவற்றிலும் பெரும்பாலானவை வருவாய்த்துறை சார்ந்தவையே. அத்துடன் மகளிர் உரிமைத் தொகை தொடர்பானவையும் பல ஆயிரம் வருகின்றன. வருவாய் அதிகாரிகள் கூறியதாவது: நகராட்சி, பேரூராட்சிகளின் சார்பில் வாரம் ஒரு முகாம் நடக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் வாரம் 3 நாட்களாவது முகாம் நடக்கிறது. இவை அனைத்திலும் தாசில்தார் உட்பட வருவாய் அலுவலர்கள் பங்கேற்றே ஆக வேண்டும். இம்முகாம்களில் பெறும் மனுக்களை பிரித்து பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்ப கூடுதலாக நாட்கள் தேவை. இதனால் இம்முகாம்களில் பெறும் மனுக்களுக்காக மட்டுமே வாரம் முழுவதும் பணியாற்றுவதால், வழக்கமான பணிகள் பாதிக்கின்றன. இப்பணிகளுக்கு இடையே கலைஞர் வீடுகட்டும் திட்டம் உட்பட பழைய திட்டங்களில் வழங்கப்பட்ட வீட்டுமனைகள் தொடர்பான விவரங்களையும் அவ்வப்போது கேட்கின்றனர். வழக்கமான சட்டம் ஒழுங்கு பிரச்னை, பட்டாக்கள், பொதுமக்களுக்கான சான்றுகளை விசாரித்து வழங்குதல் போன்றவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதேசமயம் அலுவலர்கள் இன்றி காலியிடங்கள் அதிகம் உள்ளதால் தினசரி பணிகள் போராட்டமாக உள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை