உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மேலமடையில் ரவுண்டானா ரெடி: பாலப்பணிகள் 90 சதவீதம் நிறைவு

மதுரை மேலமடையில் ரவுண்டானா ரெடி: பாலப்பணிகள் 90 சதவீதம் நிறைவு

மதுரை: மதுரை மேலமடை சந்திப்பு மேம்பாலத்தில் கீழ் பகுதியில் ரவுண்டானா தயாராகிவிட்டது. பாலப் பணியில் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மதுரை - சிவகங்கை ரோட்டில் மேலமடை சந்திப்பில் ஆவின் முதல் 1100 மீ., தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கே.கே.நகர், அண்ணாநகர் இடையே உள்ள இந்த சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒன்றரை ஆண்டுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் இப்பணிகளை துவக்கி வைத்தார். ரூ.150 கோடி செலவில் கட்டப்படும் இந்த பாலத்தின் கீழ் பெரிய ரவுண்டானா அமைகிறது. இதற்கான பணிகள் முடிந்துவிட்டன. இதனால் இங்கு போலீஸ் சிக்னல் தேவைப்படாது. இந்த ரோட்டில் அண்ணா பஸ்ஸ்டாண்ட் முதல் ரோடு விரிவாக்கப் பணியும் நடக்கிறது. அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே சந்திப்பிலும் ரவுண்டானா அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. சுற்றியுள்ள பகுதிகளில் குறியீடு செய்து கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. ரோட்டில் வடிகால் பகுதி அமைக்கப்பட்டு வருகிறது. ஆவின் சந்திப்பில் ஒரு கால்வாய் குறுக்கிடுகிறது. ரோடு பணிக்காக இதனை அடைத்தால் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் இப் பணியை முடிப்பது நெடுஞ்சாலைத் துறைக்கு சவாலாக உள்ளது. கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்டபொறியாளர் ஆனந்த் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மேலமடை சந்திப்பு பாலப்பணிகளும் ஏறக்குறைய முடிவடையும் தறுவாயில் உள்ளது. பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைப்பது, மேல்தளத்தில் சிறிய பணிகள், பாலத்தில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையின் மின்பிரிவு செயல்படுவது என பணிகள் தீவிரமெடுத்துள்ளன. இப்பணிகளை ஓரிரு நாட்களில் அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட உள்ளார். நகரில் இப்பாலத்துடன், கோரிப்பாளையம், வைகை வடகரையில் 8 கி.மீ., ரோடு போன்ற பணியும் நடக்கின்றன. அவற்றையும் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிடும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !