லஞ்சஒழிப்பு சோதனையால் அச்சம் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் வெறிச்
மதுரை: அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தும் நிலையில், எப்போதும் வாகனங்களுடன் பரபரப்பாக செயல்படும் மதுரை ஆர்.டி.ஓ., அலுவலங்கள் வெறிச்சோடின. மதுரை நகரில் வடக்கு, தெற்கு, மத்தி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.,) உள்ளன. இங்கு ஊழியர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. அதிலும் வாகன ஆய்வாளர்கள் பணியிடத்தில் ஒரு அலுவலகத்திற்கு ஒருவரே உள்ளார். இதனால் வாகன பதிவு, சோதனை, டிரைவிங் லைசென்ஸ்க்கான டெஸ்ட் உட்பட பல பணிகள் பாதிக்கின்றன. இருக்கும் அலுவலர்களை வைத்து வேலை செய்ய ஆர்.டி.ஓ.,க்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தீபாவளியையொட்டி சில மாவட்டங்களில் ஆர்.டி.ஓ., மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மதுரை ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தேவையற்ற வெளியாட்கள், புரோக்கர்கள் நடமாடுவதை தவிர்க்க கேட்களை பூட்டி பணியாற்றுகின்றனர். வாகன பதிவு, டிரைவிங் லைசென்ஸ்க்கான 'டெஸ்ட்' கூட வெளியில்தான் நடக்கிறது. நேற்று ஆட்கள் நடமாட்டம் எந்த அலுவலகத்திலும் இல்லை. காரணம் வாகன ஆய்வாளர்கள் ஒருவரே இருப்பதாலும், சிலர் பொறுப்பு அலுவலராக இருப்பதாலும் நேற்று அவர்கள் வேறு அலுவலகங்களுக்கு சென்றுவிட்ட நிலையில் பதிவு, டெஸ்ட் போன்றவை நடக்கவில்லை. டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்தலுக்கு வந்த சிலர் மட்டும் போட்டோ எடுத்துச் சென்றனர்.