உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்வித்துறை கடலுார் மாநாடு மலர் விளம்பரத்திற்கு கட்டாய வசூல் தனியார் பள்ளிகள் அதிருப்தி

பள்ளி கல்வித்துறை கடலுார் மாநாடு மலர் விளம்பரத்திற்கு கட்டாய வசூல் தனியார் பள்ளிகள் அதிருப்தி

ஆண்டிபட்டி, : பள்ளி கல்வித்துறை சார்பில் கடலுாரில் பிப்ரவரி 22 ல் நடைபெறும் தனியார் பள்ளிகளுக்கான 7வது மண்டல மாநாட்டில் மலர் வெளியிட, தனியார் பள்ளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளதால் பள்ளி நிர்வாகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதில் தமிழக முதல்வர் , அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் வெளியிடப்படும் மலரில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளியும் ரூபாய் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை பணம் செலுத்தி விளம்பரம் வெளியிட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது: மாநாட்டிற்கு விளம்பரம் வெளியிட ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் தொகை நிர்ணயித்துள்ளனர். மாவட்ட வாரியாக மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் இதற்கான கூட்டம் நடந்துள்ளது. தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கல்வி அதிகாரிகள் நிர்ணயிக்கும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனை மறுத்தால் பிரச்னைகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கல்வி கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்நிலையில் மலர் விளம்பர தொகையை எப்படி சரி செய்வது என புலம்புகின்றனர்.மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மண்டல மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் உட்பட ஏழு மாவட்ட கல்வித்துறையினர் செய்து வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெற்றோர் - ஆசிரியர் சங்க உறுப்பினர்களை பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெற்றோர்களை பங்கேற்கச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மலர் விளம்பரம் குறித்தும் அதில் பள்ளியின் பங்களிப்பு குறித்தும் ஒவ்வொரு பள்ளி நிர்வாகத்திடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரத்திற்கு பணம் கொடுக்க யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை