உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்ட செஞ்சிலுவை சங்க தேர்தலிலும் நடக்குது  ரகசிய பேரம் : அரசியல் கட்சிகளைப்போல உறுப்பினர்கள் சுறுசுறு

மாவட்ட செஞ்சிலுவை சங்க தேர்தலிலும் நடக்குது  ரகசிய பேரம் : அரசியல் கட்சிகளைப்போல உறுப்பினர்கள் சுறுசுறு

மதுரை: 'செஞ்சிலுவை சங்க தேர்தலை நடத்த மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசியல் கட்சிகளைப் போல பேரமும், சிண்டிகேட் அமைத்தும் பழைய உறுப்பினர்கள் செயல்படுவதால், கலெக்டர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டங்களில் செஞ்சிலுவை சங்கங்கள் கலெக்டர்கள் தலைமையில் செயல்படுகின்றன. புயல், வெள்ளம், வறட்சி, விபத்து உள்ளிட்ட நெருக்கடியான நேரங்களில் பொதுமக்களுக்கு உதவும் இந்த அமைப்பில் மதுரை மாவட்டத்தில் 2021 ல் 1664 பேர் உறுப்பினராக இருந்துள்ளனர். இந்த அமைப்புக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 15 பேர் கொண்ட நிர்வாக குழுவை தேர்வு செய்வர். இத்தேர்தல் 2021 ல் நடந்தபோது வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக கூறி அப்போதைய கலெக்டர் அனீஷ்சேகர் ரத்து செய்தார். அதன்பின் செயலாளர் ஒருவரை நியமனம் செய்து பணிகளை கவனித்து வந்தனர். தேர்தல் அறிவிப்பு சென்னையிலும் இதேபோல நிர்வாகக்குழு இல்லாமல் செயல்பட்டு வந்தது. இதுதொடர்பான வழக்கில் நிர்வாகக் குழு இல்லாத மாவட்டங்களில் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து மதுரை மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கத்திற்கு தேர்தல் நடத்த உள்ளதாக கலெக்டர் பிரவீன்குமார் அறிவித்தார். அதேசமயம் வாக்காளர் பட்டியலில் 580 பேர்தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் நிர்வாகிகள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் உறுப்பினராக சேர சந்தா செலுத்திய 51 பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதது குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இவர்களின் மனுக்களையும் பரிசீலிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். டிச.30ல் இறுதிப்பட்டியல் வெளியாகிறது. ரகசிய பேரம் நிர்வாக குழுவை தேர்வு செய்ய 2026, ஜன.11ல் தேர்தல் நடக்கிறது. சங்கத்தை தங்கள் கைவசம் வைத்துக்கொள்ள பழைய உறுப்பினர்கள் சிலர் ரகசிய பேரமும் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு நிகராக இந்த அமைப்பிலும் சிலர் 'அரசியல்' செய்து வருகின்றனர். கலெக்டர் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !