சித்திரை திருவிழா பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் செல்லுார் ராஜூ வலியுறுத்தல்
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் இடத்தில் ஏற்படும் இட நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு உட்பட பக்தர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: மதுரை சித்திரை திருவிழாவின் போது முஸ்லிம்கள் நீர் மோர் பந்தல் அமைப்பார்கள். மீனாட்சி சுந்தரேஸ்வரரை கிறிஸ்தவர்கள் வரவேற்பர் என்பதால் இது அனைத்து மதத்தினரும் கொண்டாடும் திருவிழா. இதில் வி.ஐ.பி.,க்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பை மற்றவர்களுக்கும் வழங்கி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.கள்ளழகர் இறங்கும் வைகையாற்று பகுதியில் அதிக நெருக்கடி ஏற்படும். அங்கு கூடுதல் பாதுகாப்பு அளித்து பக்தர்கள் அமைதியாக தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டு கொடியேற்றம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பத்திரிகை, ஊடகங்களுக்கு அனுமதி மறுத்து அறிநிலையத்துறை அதிக கெடுபிடி காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு மணிநேரத்திற்கு ரூ.40 ஆயிரம் தரமுடியுமா என கலெக்டரே கேட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சியில் நடக்கும் இவ்விழாவில் பத்திரிகை, ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.