செப்டிக் டேங்க் கழிவுநீரால் கேடு
பாலமேடு: பாலமேடு பேரூராட்சி மஞ்சமலை ஆற்றங்கரையில் வெளியேறும் 'செப்டிக் டேங்க்' கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் மஞ்சமலை ஆற்றில் உள்ள பார்வையாளர்கள் 'கேலரி' பின்புறம் 2019ல் துாய்மை இந்தியா திட்ட நிதி ரூ.5.87 லட்சத்தில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் பராமரிப்பின்றி பூட்டப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி நாளில்கூட பெண்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததில்லை. சுகாதார வளாகத்தை சிலர் கழிப்பிடமாக பயன்படுத்தியதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வளாகம் அருகே கட்டண கழிப்பறை 'செப்டிக் டேங்க்' ஆற்றங்கரையில் உள்ளது. அதன் கட்டடம் சேதமடைந்து கழிவுநீர் மாதக்கணக்கில் ஆற்றுக்குள் வெளியேறுகிறது. பார்வையாளர் கேலரி பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதால் தொற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.