மக்களுக்கான சேவையே மனிதர்களுக்கு தேவை தீபாவளி நாளில் கடமையாற்றியோர் கருத்து
பயணிகளை பாதுகாப்பது பெருமை ரவிசங்கர்: ரயில்வேயில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தீபாவளி கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்க செல்லும் பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது பெருமையாக உள்ளது. என்னைப் போன்றே லட்சக்கணக்கான ரயில்வே தொழிலாளர்களும் பண்டிகை நாட்களில் மக்கள் சேவையாற்றுகின்றனர்.அவர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சியே. மதுரை கோட்டத்தில் தொழிலாளர்கள் தீபாவளியன்று பாதிநாள் குடும்பத்தோடு நேரம் செலவிடும் வகையில்வேலை அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் தொழிலைத் தாண்டி சேவை மனப்பான்மையுடன் பங்காற்றி வருகிறோம். குறைவில்லாத மருத்துவ சேவை சசிகலா: தீபாவளியன்று காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை வேலை நேரம் உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதால் இங்கு பண்டிகை நாட்களிலும் பணியாற்றுவது அவசியம். நோய், விபத்து என பாதிப்புக்குள்ளாகி வரும் மக்களுக்கு சேவை செய்வதே மனநிறைவாக உள்ளது. எட்டு மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருவர்.ஞாயிறு முதலே பட்டாசு விபத்து பாதிப்புக்குள்ளானோர் வந்தவண்ணம் உள்ளனர்.தீபாவளியன்று அதிகமானோர் அனுமதிக்கும் வகையில், போதிய படுக்கைகள், கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவையில் குறையில்லாமல் செயல்படுகிறோம். பொதுச் சேவைக்கு தயங்கியதில்லை துாய்மை பணியாளர் கருப்பாயி: தீபாவளியன்று எனக்கு காலை 6:00 முதல் மதியம் 2:00 மணி வரை வேலை நேரம் உள்ளது. துாய்மை பணியின் அவசியம் கருதி சேவை முறையில் பணியாற்றி வருகிறோம். பிற நாட்களை விட தீபாவளி நாளில் குப்பை அதிகமாக வந்தாலும் முகம் சுளிக்காமல் பணியாற்றுவோம். எனவே தீபாவளியை பணிமுடிந்து மாலையில் குடும்பத்தினருடன் கொண்டாடுவேன். ஊரே மகிழ்ச்சியாக கொண்டாடும் வேளையில் அவர்களின் மகிழ்ச்சிக்கு நாமும் ஒரு காரணம் என்பதே நமக்கு மகிழ்ச்சியான விஷயம்தானே. இதனால் விடுமுறை நாளில் பணியாற்றுவதற்காக தயங்குவதில்லை. பணிமுடித்து கொண்டாடுவேன் பால்பாண்டி: எனது தந்தை போலீஸ்காரராக பணிபுரிந்தவர். நானும் 18 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணிபுரிகிறேன். தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் எங்களுக்கு 4:00 மணி நேரம் உயரதிகாரிகள் பணி ஒதுக்கீடு செய்துள்ளனர். காலையில் பகுதியாக குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிவிட்டு பணிக்கு வந்தேன். பணி முடிந்த பின் கொண்டாட்டத்தை தொடர்வேன். பொதுச் சேவைக்கு வந்தபின், இதுபோன்ற பண்டிகை நாட்களில் மக்களுக்காக பணிபுரிவது மகிழ்ச்சியை தருகிறது. தலையாய பணியால் பெருமை ராஜ்குமார்: நான் 23 ஆண்டுகள் பணிபுரிகிறேன். இக்காலகட்டத்தில் ஒருமுறைகூட குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடியதில்லை. தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டால், மக்களை பாதுகாக்கும் தலையாய பணியில் ஈடுபடுகிறோம். இது பெருமையானதே. அதேசமயம் தீ விபத்துகள் தொடர்பாக வரும் தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தீயணைப்புத்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவித்தபடி இருப்போம். 2020 ல் தீபாவளியன்று மதுரையில் ஒரு ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தனர். இது மறக்க முடியாத அனுபவம். பயணிகளுக்கு உதவுவது பெருமை பாண்டியன்: இருபது ஆண்டுகளாக பணிபுரிகிறேன். தீபாவளி, தைப்பொங்கல் உள்ளிட்ட முக்கிய விடுமுறை நாட்களில் மக்களுக்காக பணிபுரிவது மகிழ்ச்சியே. இந்நாளிலும் பலர் ஏதேதோ அவசர காரணங்களுக்காக பயணம் செய்வர். அவர்களுக்காக பணியாற்றுவதும் பெருமையாக உள்ளது. விடுமுறை நாளில் பணியாற்றுவதாலும் குடும்பத்திலும் அதை பொருட்படுத்தியதில்லை. பணி முடிந்தபின் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடுவேன்.