கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர், பணியாளர் பற்றாக்குறை
பேரையூர் : மதுரை கால்நடை மருத்துவமனைகளில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.மருத்துவமனை, மருந்தகங்களில் மருத்துவர்கள், ஊழியர்கள் காலிப் பணியிடங்கள் சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். ஆண்டுக்கு இருமுறை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது தவிர தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி, மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதற்கு ஒரு உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் என மூவரும், கிளை நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர் வீதம் நியமிக்கப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.ஆனால் பெரும்பாலான மருந்தகங்களில் உதவியாளர்கள், ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவை உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.இதனால் சில விவசாயிகள் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், ஊழியர்களை தேடிக் கண்டுபிடித்து, செலவு செய்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். பல விவசாயிகள் தனியார் மருந்தகங்களில் மருந்து, ஊசி வாங்கி சுயமாக சிகிச்சை அளிக்கின்றனர். எனவே காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.