உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செங்கல்பட்டு அருகே சிக்னல் பழுது; தென்மாவட்ட ரயில்கள் தாமதம்

செங்கல்பட்டு அருகே சிக்னல் பழுது; தென்மாவட்ட ரயில்கள் தாமதம்

மதுரை: செங்கல்பட்டு அருகே சிக்னல் பழுதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட முக்கிய ரயில்கள் நேற்று ஒருமணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்ததால் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் அவதிக்குள்ளாயினர். செங்கல்பட்டு மாவட்டம் ஒட்டிவாக்கம் அருகே நேற்று முன்தினம் (அக்., 17) மாலை 6:25 மணியளவில் திடீரென சிக்னல் பழுது ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6:20 மணிக்கு புறப்பட்ட கன்னியாகுமரி ரயில் நடுவழியில் நின்றது. இதன் தொடர்ச்சியாக பின்னால் வந்த முத்துநகர், அனந்தபுரி, பொதிகை, நெல்லை, தாம்பரம் - மதுரை, தாம்பரம் - நாகர்கோயில் 'அந்தியோதயா' ரயில்கள், தாம்பரம் - செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே ஆங்காங்கே ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்பட்டன. பாண்டியன் ரயில் 55 நிமிடங்கள் தாமதமாக நேற்று காலை 6:20 மணிக்கு மதுரை வந்தது. தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில் 4:50 மணி நேரம் தாமதமாக காலை 7:10 மணிக்கு மதுரை வந்தது. எழும்பூர் - மதுரை 'மெமு' சிறப்பு ரயில் 2:45 மணி நேரம் தாமதமாக மதியம் 1:00 மணிக்கு மதுரை வந்தது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்குள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு நேற்று அதிகாலை 1:30 மணிக்கு மேல் சென்றதால் பயணிகள் வீடுகளுக்குச் செல்ல பஸ் வசதியின்றி ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. ரயில்வே தரப்பில் கூறுகையில்,'சிக்னல் பழுதால் விழுப்புரம் வழியாக செல்லும் 19 ரயில்கள், சென்னை வழியாக செல்லும் 8 முதல் 10 ரயில்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பழுது குறித்து விசாரணை நடக்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !