உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தத்தளித்த மதுரை: குடியிருப்புகளில் மழை நீர்: அமைச்சர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு

தத்தளித்த மதுரை: குடியிருப்புகளில் மழை நீர்: அமைச்சர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு

மதுரை: மதுரை நகரில் நேற்று பெய்த தொடர் மழையால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா,மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்தனர். போனில் மதுரை நிலவரம் குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளான பிபீகுளம் முல்லைநகர், பாண்டியன் நகர் பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மாநகராட்சி சார்பில் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முல்லை நகரில் தேங்கிய மழைநீரை பிபீகுளம் கால்வாய், சின்ன சொக்கிக்குளம் கால்வாய் வழியாக உலகத்தமிழ்ச்சங்கம் எதிரேயுள்ள கரும்பாலை கால்வாய் வழியாக வைகை ஆற்றில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.முல்லைநகர் தனபால் பள்ளி நிவாரண மையத்தில்மக்கள் தங்க வைக்கப்பட்டனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து தரப்பட்டன. மழைநீர் தடையின்றி செல்ல மாநகராட்சி குழு தயாராகஇருந்தது. நீர் வழித்தடத்தில் தடைகளை அகற்ற 5 மண் அள்ளும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன. இதற்கிடையே நேற்றுஇரவு அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் சங்கீதாவிடம் மழை பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது வெங்கடேசன் எம்.பி., தளபதி எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், ஆர்.டி.ஓ., ஷாலினி, மாநகராட்சி மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி உடனிருந்தனர். மதுரை மழை பாதிப்புகள் குறித்து காணொலியில் அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார். செல்லுாரில் மீண்டும் வெள்ளம்: இதற்கிடையே செல்லுார் பூந்தமல்லி நகர் பாலம், குப்பை பாலம், குதிரை பாலத்தின்கண்களில் ஆகாயத்தாமரை செடிகள் அடைத்ததால் நேற்றிரவு மழைநீர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் மீண்டும் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் துாக்கத்தை தொலைத்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் பலனில்லை என புலம்பினர். இருநாட்களுக்கு முன்புதான் இப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
அக் 26, 2024 09:34

மதுரையில் அருமையான மழை .. எனது சிறுபிராயத்தில் அழகரை வணங்குவதற்கு மதுரை சென்றுஉள்ளேன் . எனது அந்தநாள் நினைவுகள். தற்சமயம் அரசு ஏற்ஷ்கின் ஹாஸ்பிடல் எதிர்புறம் உள்ள ரோடு முழுவதும் தண்ணீர் செல்லும் கால்வாய் .மதிச்சாயம் முழுவதும் வைகையின் ஆக்ரிமைப்புகள். மேலும் இன்று இருக்கின்ற மதுரை மாநகராட்சி, வாக்கபோர்டு கல்லூரி அன்றைய தல்லாகுளம் கண்மாய்கள். மேலும் மதுரை கோர்ட்டும் தன்மையில் கட்டப்பட்டதுதான். பந்தல்குடி கலவையின் அகலம் சுமார் நுறு அடிகள் ஆனால் தர் போதய நிலை. இதேபோல மதுரை தென் பகுதியிலும் தண்ணீர் கண்மாய்கள் அக்ரிமி த்து அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன இயற்கை நியதி... ஆணையும் தண்ணீரும் தா ன் செல்லும் வழித்தடங்களை மாற்றுவதேயில்லை. அதை விடுத்திவிட்டு மழை தண்ணீர் வீட்டுற்குள் வருகிறது என புலம்ப கூடாது . மனிதர்களின் ஆக்ரிமைப்பில் மதுரை நீர் வழித்தடங்கள் காணாமல் போயின. இன்று புலம்பி அர்த்தம் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை