மருத்துவமனைகளில் வசதிகள் மேற்கு வங்க அரசு தாமதம் உச்ச நீதிமன்றம் அதிருப்தி
புதுடில்லி: மேற்கு வங்க மருத்துவமனைகளில், சிசிடிவி கேமரா பொருத்துவது, பெண் டாக்டர்களுக்கு தனி கழிப்பறை, ஓய்வறை அமைக்கும் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.மேற்கு வங்கம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில், பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:கொல்லப்பட்ட பெண் டாக்டர் தொடர்பான தனிப்பட்ட விபரங்கள், படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு ஏற்கனவே தடை விதித்துள்ளோம். இது செயல்படுத்தப்படுவதை, அரசு அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.மருத்துவமனைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது, பெண் டாக்டர்களுக்கு தனி கழிப்பறை, ஓய்வறை அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிருப்தியை அளிப்பதாக உள்ளது.டாக்டர்கள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவில் பணிக் குழு அமைக்க உத்தரவிட்டிருந்தோம். இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.வழக்கின் விசாரணை, 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.