உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு

 அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு

மதுரை: ''அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்'' என உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மதுரையில் பேசினார். 'உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் எழுதிய 'கடந்த நேரமும், நடந்த துாரமும்' சுயசரிதை புத்தகம் வெளியீட்டு விழா அவரது பெயரிலான அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடந்தது. அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் செல்வ கோமதி வரவேற்றார். உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் புத்தகத்தை வெளியிட்டார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பெற்றுக் கொண்டார். மகாதேவன் பேசியதாவது: பல எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் சுயசரிதை எழுதியுள்ளனர். அதிலிருந்து சிவராஜ் வி.பாட்டீல் விலகிச் சென்றுள்ளார். கர்நாடகாவில் பிறந்த இவர் குழந்தை பருவத்தில் தாயை இழந்தவர். பள்ளிக்கு தினமும் 35 கி.மீ.,மாட்டு வண்டியில் சென்று வந்தவர். அவரது வாழ்க்கை கடினம், துயரம் சார்ந்தது. அதன் போக்கில் வாழ்ந்ததால் அன்பு, பணிவு, கருணையை வாழ்க்கை கற்றுத் தந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் நீதிபதியாக இருந்தபோது, நான் வழக்கறிஞராக வழக்கு நடத்தியிருக்கிறேன். அவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். எப்படி பிறந்தோம், இன்பம், துன்பம் அனுபவிப்பதை தள்ளிவையுங்கள். தமிழ் மண் வாழ்க்கை சிந்தனைக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுத் தந்துள்ளது. அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்றார். ஜெயச்சந்திரன் பேசுகையில்,'காலம் நமக்காக காத்திருக்காது. துாரத்தை கடக்க வேண்டும் என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது. அப்பயணத்தில் மக்கள் நலனிற்காக, உயர்ந்த நோக்கத்திற்காக ஒவ்வொரு அடியையும் நேர்மையாக எடுத்து வைக்க வேண்டும்,' என்றார். சிவராஜ் வி.பாட்டீல் பேசியதாவது: பின்தங்கிய கிராமத்தில் பிறந்தேன். அக்கிராமத்தில் நான்தான் முதல் பட்டதாரி. கடின உழைப்பு, நேர்மை, மனிதநேயம் தேவை. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் கோயில்கள் அதிகம். இதை தமிழ்நாடு என்பதற்கு பதிலாக 'கோயில் நாடு' என பெயர் சூட்டியிருக்கலாம் என்றார். ஜார்கண்ட் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம், எழுத்தாளர் பொன்னீலன் பங்கேற்றனர். அறக்கட்டளை நிதி அறங்காவலர் ரமணி மேத்யூ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ