மேலும் செய்திகள்
'இறையச்சம் கலந்த பக்தியே உயர் தவம்'
17-Mar-2025
மதுரை : ''துாய்மையான அன்பினால் சரணடைந்தால் இறைவனை அடையலாம்'' என சுவாமி தத்துவாத்மானந்தா அறிவுரை வழங்கினார்.மதுரை கீதாபவனம் சார்பில் ராமநவமியை முன்னிட்டு தொடர் சொற்பொழிவு நடக்கிறது. இதில் ராமாயண 'கதாபாத்திரங்கள் கூறும் வாழ்க்கை நெறி' என்ற தலைப்பில் நேற்று சுவாமி தத்துவாத்மானந்தா பேசியதாவது:அன்பினால் மட்டுமே இறைவனை அடைய முடியும். 'அதிலும் ஆடம்பர அன்பு, உணர்வு பூர்வமான அன்பு' என்று உள்ளது. ஆடம்பரமான அன்பு என்பது சகல பொருட்களுடனும் நைவேத்தியங்களுடனும் இறைவனை வழிபடுவது. அதில் ஒரு அகங்கார செருக்கு இருக்கும்.உணர்வுப்பூர்வமான அன்பு என்பது இறைவன் திருவடிகளை சரணடைவது. பக்தர்கள் அன்பை கண்டவுடன் கடவுளின் கண்கள் மலர்ந்து விடும். அத்தகைய குணங்களைக் கொண்டவர் குகன். ஒற்றுமை மேம்பட பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. வெளிப்படுத்தும் அன்பும் உணர்வுப்பூர்வமானதாக இருக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் என்ற எண்ணத்தில் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும். உள்ளத்தால் ஒன்றுபட்டு வாழ்வதே நமது பண்பாடு.இவ்வாறாக ராமன் தன்னுடைய அன்பை தாய், தந்தை, மனைவி, சகோதரர்கள், நண்பர்கள், மக்களிடத்தில் முழுமையாக வெளிப்படுத்தி திருப்தி செய்கிறான். குகன் நட்பிற்கு இலக்கணமாய் 'துாய்மையான அன்புடன்' இருந்தான். இரண்டு நிலையிலும் அன்பினை வெளிப்படுத்தியவன் சுக்ரீவன். இன்று இந்த நிலையில் தான் பலர் உள்ளனர். துன்பத்தில் இறைவனை நாடுவது, பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டால் இறைவனை மறந்து விடுவது என்று இருக்கின்றனர். ராமனுக்கு நல்ல நண்பன் கிடைத்தான். அதுபோல நல்ல நண்பர்கள் இருந்தால் என்ன பிரச்னை வந்தாலும் பாதுகாப்பான உணர்வு இருக்கும். அக அழகு உறவுக்கு மேன்மை தரும், புற அழகு அழிவுக்கு வழிவகுக்கும். ராமனுடைய ஆட்சியில் அறிவாலும், குணத்தாலும் மக்கள் மேம்பட்டு இருந்தனர் என்றார்.
17-Mar-2025