உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / என்.எம்.சி.,யின் டாக்டர்களுக்கான கவுன்சிலிங் கெடு மத்திய அரசை குறைசொல்லும் தமிழக அரசு

என்.எம்.சி.,யின் டாக்டர்களுக்கான கவுன்சிலிங் கெடு மத்திய அரசை குறைசொல்லும் தமிழக அரசு

மதுரை: அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பேராசிரியர், இணைப்பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேசிய மருத்துவ கவுன்சிலின் (என்.எம்.சி.,) 'கவுன்சிலிங்' காலஅவகாசம் அக்டோபரில் முடிகிறது. இதுவரை தமிழக அரசு கவுன்சிலிங் அறிவிப்பு வெளியிடவில்லை என அரசு டாக்டர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பாதது குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் (என்.எம்.சி., ) விளக்கம் கேட்டது. இதற்கு நான்கு மாத கால அவகாசம் வேண்டுமென தமிழக அரசு தெரிவித்தது. அக்டோபருடன் கால அவகாசம் முடிகிறது. இதுவரை பேனல் கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. திசை திருப்பும் வேலை அரசு டாக்டர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2024 - 25 மற்றும் 2025 - 26 ம் ஆண்டு பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் பேனலை தற்போது வரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. என்.எம்.சி., தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட போது நான்கு மாத காலம் அவகாசம் வேண்டுமென தமிழக அரசு தெரிவித்தது. ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்திய பின் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தினால் இப்பிரச்னைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். ஆனால் என்.எம்.சி., ஒவ்வொரு முறை விளக்கம் கேட்கும் போதும் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பெயர் பட்டியலை கேட்டுள்ளோம் என்கின்றனர் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள். எத்தனை முறை கேட்டாலும் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் அதே டாக்டர்களின் பெயர் பட்டியல் தான் வரும். அடுத்த மார்ச் வந்தால் மூன்றாண்டு கால கவுன்சிலிங் சேர்ந்து விடும். ஆனால் கவுன்சிலிங் நடத்தாமல் காலம் தாழ்த்தி மீண்டும் பட்டியல் கேட்டு சுற்றறிக்கை விட்டு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவதை அதிகாரிகள் நிறுத்தவேண்டும். மத்திய அரசை குறைசொல்வதா இந்த நிலை தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இருந்தால் மாணவர்கள் சேர்க்கையை என்.எம்.சி., ரத்து செய்துவிடும். அரசு மருத்துவக் கல்லுாரி என்பதால் விளக்கம் கேட்கிறது. ஒருவேளை மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைத்தால் எளிதாக மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக மத்திய அரசை குறைசொல்வதிலேயே காலத்தை கடத்துகின்றனர். அதிகாரிகளுடன் சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் ஆலோசனை செய்து அக்., இறுதிக்குள் கவுன்சிலிங் பேனல் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !