குன்றம் கோயிலில் இன்று முதல் தற்காலிக மூலஸ்தானத்திற்கு தடை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோயில் வளாகத்திலுள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்திற்கு முன்பாக யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 10) மாலையில் துவங்கப்பட உள்ளது. இதனால் கோயில் சண்முகர் சன்னதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அத்திமர மூலவர்களின் சக்தி, புனிதநீர் அடங்கிய கும்பத்தில் கலை இறக்கப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட உள்ளது.அதனால் இன்று மாலை முதல் ஜூலை 13வரை தற்காலிக மூலஸ்தானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நாட்களில் கோயிலின் நுழைவு பாதையான ஆஸ்தான மண்டபம். திருவாட்சி மண்டபம், வல்லப கணபதி சன்னதி வழியாக சென்று யாகசாலையில் நடக்கும் பூஜைகளை தரிசனம் செய்து வெளியில் செல்ல பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது எனகோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்மூகசுந்தரம், ராமையா,துணை கமிஷனர் சூரியநாராயணன் தெரிவித்தனர்.