டெட் தேர்வு அறிவிப்பு: சீராய்வு மனுவுக்கு எதிரானது; ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி
மதுரை: 'உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு 'டெட்' தேர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது முரண்பாடானது. இந்த உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும்' என ஆசிரியர்கள் சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன. தமிழகத்தில் பணியில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். 5 ஆண்டுகளில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளோர் தவிர பிறர் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என செப்.,1ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் 2.25 லட்சம் ஆசிரியர்களின் பணி நிலை கேள்விக்குறியானது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், ஆசிரியர் பாதுகாப்பு கூட்டு இயக்கம் (ஜாக்பாட்) சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அடுத்தாண்டு ஜனவரியில் சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது முற்றிலும் முரண்பாடான நடவடிக்கை. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதை வாபஸ் பெற வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. இதுகுறித்து 'ஜாக்பாட்' மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் இருந்து மூத்த ஆசிரியர்களை பாதுகாக்க விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்' என அறிவித்துள்ளார். இது நாடுமுழுவதும் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிம்மதியை தந்த நிலையில், தமிழக அரசின் சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிப்புஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்திடம் தமிழக அரசு ஆலோசித்திருக்கலாம். அரசின் இந்த முடிவு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கும் நிலைப்பாட்டிற்கு எதிரானது. 2011, நவ.,15 க்கு முன் பணியில் சேர்ந்த மூத்த தகுதிகாண் பருவம் முடித்த ஆசிரியர்களை தகுதி தேர்விலிருந்து விடுவித்து பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தை தற்போது நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்.24ல் 'ஜாக்பாட்' சார்பில் சென்னையில் தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.