அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பிரம்மோற்ஸவம் நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பொன் வேய்ந்த சுந்தரபாண்டியன் மண்டபத்தில் தங்கக் கொடிமரம் முன் உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார். அவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9:35 மணிக்கு பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயில் யானை ஆண்டாள் ஆசீர்வதிக்க, பக்தர்களின் 'நாராயணா' கோஷங்களுக்கிடையே கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. பின் கொடி மரத்திற்கு அருகம்புல் சாத்தப்பட்டு, பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். ஆக., 8 வரை காலையில் தங்கப்பல்லக்கு, மாலையில் சிம்மம், அனுமார், கருடன், சேஷன், யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளுகிறார். பவுர்ணமி தினமான ஆக., 9 காலை 8:40 மணிக்கு மேல் 8:55 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. மாலை புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுகிறார். ஆண்டிற்கு ஒருமுறை திறக்கப்படும் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகள் அன்று மாலை திறக்கப்பட்டு படிப்பூஜை, தீபாராதனை காண்பித்து கதவுகளுக்கு சந்தன சாத்துபடி நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு மேல் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆக., 10ல் தீர்த்தவாரி, ஆக., 11ல் உற்ஸவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் மூலவரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கலாம். ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், அறங்காவலர்கள் செய்துள்ளனர்.